மதுரை: மதுரை, புதுநத்தம் ரோட்டில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ரூ10 கோடி மதிப்பீட்டில் திறந்த வெளி அரங்கு அமைக்க திட்டமிடப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இது அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு விரைவில் இப்பணிகள் தொடங்கப்படும். அதேபோல வாசகர்கள் தாங்கள் கொண்டுவரும் சொந்த புத்தகங்களை வாசிப்பதற்கு ஏதுவாக ரூ2.40 கோடி மதிப்பீட்டில் தனி அரங்கு அமைக்கப்பட உள்ளது.
மேலும் நூலக கட்டிடத்தில் பொதுப்பணித் துறையின் மூலம் ரூ40 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து பொதுப்பணித் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடந்தது. பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் மங்கத்ராம் சர்மா, கலெக்டர் சங்கீதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அய்யாச்சாமி உள்ளிட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
கடந்த ஓராண்டில் 11 லட்சம் பேர் வருகை
கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை கடந்தாண்டு ஜூலை15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஓராண்டை கடந்துள்ள நிலையில், இதுவரை 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், நூலக ஆர்வலர்கள், பொதுமக்கள் அதிகளவில் வந்தவண்ணம் உள்ளனர். இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதத்தில் நேற்று அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்தினார்.