கல்லூரி மாணவர்களின் மீட்டிங் பாயின்ட்!
ஓட்டல் அமைக்க சிலர் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் செலவு செய்கிறார்கள். அதற்கான இடத்தை தேடித்தேடி அலைந்து தேர்வு செய்கிறார்கள். மாதக்கணக்கில் கட்டிடம் கட்டுகிறார்கள். ஆனால் தனது வீட்டின் மொட்டை மாடியையே அழகிய கஃபேவாக மாற்றியிருக்கிறார் வினோத் என்ற இளைஞர். கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரத்தில் உள்ள அவரது வீடு `டீட்ஸ் கஃபே’ என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் விரும்பி வந்து சாப்பிடும் உணவகமாக மாறியிருக்கிறது. மாடித்தோட்டம் போன்ற தோற்றம். அதில் அழகான இன்டீரியர் டிசைன்கள் எல்லாம் அமைத்து அசத்தி இருக்கிறார் வினோத். மேலே நிழலுக்கு கூரை. அதன் கீழ் அழகுற போடப்பட்டிருக்கும் பெஞ்சுகளில் அமர்ந்து சூழலை ரசித்து உணவுகளை ருசிக்கலாம். மழை வந்தால் சொர்க்கத்தையே காணலாம். அப்படியொரு சூழலில் வினோத்தை சந்தித்தோம்…கஃபே தொடங்கி 6 வருடங்கள் ஆகிறது. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு ஏதாவது பிஸ்னஸ் செய்யலாம் என யோசிக்கும்போதுதான் கஃபேயை தொடங்கலாம் என முடிவெடுத்தேன்.
எங்கள் பகுதியில் கல்லூரி மாணவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் சாப்பிடுவதற்கோ டீ, காஃபி குடிப்பதற்கோ எந்தக் கடையும் இல்லை. அதை மனதில் கொண்டுதான் இந்த கஃபேயைத் தொடங்கினேன். கடை தொடங்கிய ஆரம்பத்தில் டீ, காஃபி, ஜூஸ் என கொடுத்து வந்தோம். இப்போது பல வகையான டெஸர்ட்ஸ் கொடுத்து வருகிறோம். கஃபே ஆரம்பிக்கும்போது எனக்கு சமையலைப் பற்றி எதுதுமே தெரியாது. இருந்தாலும் ஒரு தைரியத்தில் கஃபேயைத் தொடங்கினேன். இப்போது நான்தான் எனது கஃபேயின் மெயின் செஃப். நல்ல உணவுகளை நல்ல சூழல்ல கொடுத்தா மக்களுக்கு பிடிக்கும். எங்க கஃபே சாப்பிடக்கூடிய இடமாக மட்டும் இல்ல. பலருக்கும் இது ஒரு மெமரீஸ் மாதிரி. இங்க வரவங்க சாப்பிட்டுக்கிட்டே ரிலாக்ஸா ஒரு கொண்டாட்டத்துக்கு வர மாதிரி வராங்க. கல்லூரி மாணவர்கள் நிறைய பேர் இங்க வருவதால் அவர்களுக்கு பிடித்த மாதிரியான உணவுகளைக் கொடுக்கலாம்னு யோசிச்சு இப்ப பல வகையான ஸ்டார்ட்டர்ஸ், பர்கர்ஸ், பீட்சா என அனைத்துமே கிடைக்கும்படி செய்திருக்கிறோம். பர்கரில் மட்டும் 35 வெரைட்டி இருக்கிறது. சிக்கனில் ஃப்ரைட் சிக்கன், சிக்கன் விங்ஸ், சிக்கன் பாப்கார்ன் என பலவகையில் கிடைக்கிறது.
இப்படி ஒவ்வொரு உணவும் வாடிக்கையாளர்களுக்கு பிடித்த வகையில் செய்து கொடுக்குறோம். அதனால் அவர்கள் தினசரி வருவது மட்டுமில்லாமல், அவர்களின் நண்பர்களையும் அழைத்து வராங்க.கஃபேக்கு வருகிற வாடிக்கையாளர்கள் அவர்களது நிறைகுறைகளை சொல்வதற்காகவும், அவர்களது மெமரீஸை ஞாபகப்படுத்துவதற்காகவும் எங்கள் கஃபேயில் பேப்பர்கள் வைத்துள்ளோம். அந்த பேப்பரில் அனைவரும் அவர்களது அனுபவங்களை எழுதிவிட்டு செல்கின்றனர். மீண்டும் எப்பவாது நமது கடைக்கு அவர்கள் வந்து அந்த பேப்பரை தேடிப்படிக்கும்போது சந்தோசமாக உணர்கின்றனர். அதேபோல நமது கஃபேயில் இருக்கிற லைட்டிங் செட்டப் போட்டோ எடுப்பதற்கு நன்றாக இருப்பதால் வருபவர்கள் போட்டோ எடுத்தும் மகிழ்கிறார்கள். திறந்தவெளி கஃபே, பிடித்த மாதிரியான இன்டீரியர், நண்பர்களோடு அரட்டை, விரும்பும் உணவு என அனைத்தும் ஒரே இடத்தில் பிடித்த மாதிரி இருப்பதால் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியாக வருகிறார்கள்.
நமது கஃபேயில் இருக்கிற அனைத்து வகையான உணவுகளுமே வீட்டு முறையில் தயாரிக்கப்படுகிற ரெஸ்டாரன்ட்ஸ் டிஷ்தான். சென்னையில் பல உணவகங்கள் இருந்தாலும் வீட்டு முறை உணவுகளைத் தேடித்தேடி சாப்பிடும் பழக்கம் உடையவர்கள்தான் நாமெல்லாம். அதே நேரத்தில் ரெஸ்டாரென்டில் கிடைக்கிற பலவகையான வெரைட்டிகளையும் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். இது இரண்டும் ஒரே இடத்தில் கிடைத்தால் நன்றாக இருக்கும் என பலரும் யோசிப்பார்கள். அப்படி யோசிப்பவர்கள் நேராக டீட்ஸ் கஃபேக்குதான் வருகின்றனர். பர்கரை பொறுத்தவரை அது தயாரிப்பதற்கு தேவையான பொருட்களை கடையில் ரெடிமேடாக வாங்கி அதன்பின் தயாரித்துக் கொடுப்பார்கள். ஆனால், நாங்கள் அப்படி இல்லை. அனைத்துப் பொருட்களுமே வீட்டில்தான் தயாரிக்கிறோம். அதேபோல, சான்ட்வெஜ், பீட்சா, பாஸ்தா, மோமோஸ் என அனைத்திலுமே வெரைட்டி கொடுக்கிறோம். அனைத்து உணவுகளிலுமே தனிச்சுவை தெரிவதால் சாப்பிட வருபவர்கள் பலரும் அனைத்து வகையான வெரைட்டியையும் சுவைத்துப் பார்க்கிறார்கள்.சான்ட்வெஜில் மட்டும் கொரியன் ஸ்டிரீட் டோஸ்ட், ஃப்ரைட் சிக்கன் சான்ட்வெஜ், முட்டை சான்ட்வெஜ் என பல வெரைட்டி கொடுக்கிறோம்.
அதேபோல, பர்கரில் மஷ்ரூம் பர்கர், பனீர் பர்கர், சிக்கன் பர்கர், ஹவாலியன் பர்கர் என வெரைட்டி கொடுக்கிறோம். எங்கள் கஃபேயின் ஸ்பெஷல் பர்கர் என்னவென்றால் பன்னுக்கு பதிலாக சிக்கனையே இரண்டு பக்கமும் கடித்து சாப்பிடும் பர்கர்தான். அதுதான் இங்கு வருபவர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவது. அதைத் தொடர்ந்து பல வகையான ஜூஸ், மில்க்சேக், மொஜிடோ, வெரைட்டி டீ, காஃபியும் கொடுத்து வருகிறோம்.கஃபேக்கு வரும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள் என்பதால், அவர்களுக்கு தகுந்தபடி விலையும் இருக்கும். மதியம் 1 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிவரை கஃபே செயல்படுகிறது. உணவுகளைப் பொறுத்தவரை அனைத்துமே நான்தான் தயாரிக்கிறேன்.
நான் இல்லாத நேரத்தில் எனது தம்பி சமையலை கவனித்துக் கொள்வான். இப்போது எனது அம்மா, அப்பா கூட அனைத்து வகையான டிஷ்களை தயாரிக்கிறார்கள். எங்கள் குடும்பத்தில் இருக்கிற அனைவருக்குமே இந்த கஃபேயின் அனைத்து வகையான உணவு தயாரிப்பிலும் அனுபவம் இருக்கிறது. அதனால் எனது அம்மா, அப்பாவிற்கென்று தனியாக இன்னொரு கஃபே வைத்துக் கொடுத்திருக்கிறேன். கொரோனாவிற்கு முன்பு 3 இடங்களில் நமக்கு கஃபே இருந்தது. கொரோனா காலத்திற்கு பிறகு நிலமை சரியில்லாததால் மற்ற கடைகளையெல்லாம் மூடும்படி ஆகிவிட்டது. நல்ல உணவுகளை எங்கு கொடுத்தாலும் மக்கள் வருகிறார்கள். அதற்கு நானே முன்னுதாரணம். செய்யும் தொழிலை உண்மையாக செய்தால் அந்த தொழிலே நமக்கு அடையாளமாக மாறும். அப்படித்தான் எனக்கும் நடந்திருக்கிறது’’ என்கிறார் வினோத்.
– ச.விவேக்
படங்கள்: கெளதம்
சுவையான சிக்கன் பாப்கார்ன்
தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்
பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
பிெரட் – 4
முட்டை – 1
பால் – 1 டேபிள் ஸ்பூன்
மைதா – 1/2 கப்.
செய்முறை:
முதலில் சிக்கனை சிறு துண்டுகளாக வெட்டி, நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய சிக்கனை ஒரு பெளலில் போட்டு, அத்துடன் பூண்டு விழுது, எலுமிச்சைச் சாறு மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு பிெரட் துண்டுகளை நன்கு பொன்னிறமாக டோஸ்ட் செய்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து, ஒரு தட்டில் போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின் பிரட் தூளுடன் சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதனுடன் பாலை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு தட்டில் மைதாவை போட்டுக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ளவும். பின்னர் ஒரு சிக்கன் துண்டை எடுத்து, முதலில் முட்டை கலவையில் பிரட்டி, பின் மைதாவில் பிரட்டி, அதன் பின் மீண்டும் முட்டையில் பிரட்டி, இறுதியாக பிரெட் தூளில் பிரட்டி எண்ணெயில் போட வேண்டும். இப்படி அனைத்து சிக்கனையும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான சிக்கன் பாப்கார்ன் தயார்.