சேலம்: தமிழ்நாடு, புதுச்சேரியில் 15 ஆயிரம் பேரிடம் ரூ58 கோடி மோசடி செய்த வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்த அமுதசுரபியின் பொதுமேலாளர் கோவை டான்பிட் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். சேலம் அழகாபுரத்தில் அமுதசுரபி சிக்கன மற்றும் கடன் கூட்டுறவு சங்கம் என்ற பெயரில், நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் பல்வேறு கவர்ச்சி திட்டங்களை கூறி, பொதுமக்களிடம் இருந்து பெருமளவு தொகையை முதலீடு பெற்று ஏமாற்றி விட்டதாக புகாரின் பேரில், சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதன் தலைவர் ஜெயவேல், நிறுவனர் தங்கபழம், இயக்குநர் சரண்யா, பொது மேலாளர் பிரேம்ஆனந்த் ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரியில் மட்டும் 94 கிளைகளை தொடங்கி, 15 ஆயிரம் பேரிடம் சுமார் 58 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் 1,500 பேர் புகார் கொடுத்துள்ளனர். இந்நிலையில், இன்னும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களிடம் புகாரை பெறும் வகையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சேலத்தில் சிறப்பு முகாம் ஒன்றை நடத்தினர். இதில், 300 பேர் புகார் கொடுத்திருந்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் பொதுமேலாளர் பிரேம் (எ) பிரேம் ஆனந்தை தேடி வந்தனர். இவர் தான் அந்த மோசடிக்கு முக்கியமான காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சென்னை பீர்க்கங்கரனையை சேர்ந்த பிரேம்ஆனந்த், கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்தார். இதையடுத்து அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இவரை காவலில் எடுத்து விசாரிக்க சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக இன்று (16ம்தேதி) நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்கின்றனர்.