*ஒரு மணி நேரத்திற்கு ரூ.30 கட்டணம் வசூல்
*டீலக்ஸ் கழிவறைக்கு ரூ.2, லக்கேஜிக்கு ரூ.20 வசூல்
விழுப்புரம் : விழுப்புரம் ரயில்நிலையத்தில் அம்ரித்பாரத் திட்டத்தில் ரூ.23.50 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அதன்ஒருபகுதியாக ரூ.70 லட்சத்தில் குளிர்சாதன வசதிகொண்ட சொகுசுஓய்வறை திறக்கப்பட்டுள்ளது. பயணி ஒருவருக்கு ரூ.30 கட்டணமும், டீலக்ஸ் கழிவறைக்கு ரூ.2 கட்டணமும், 24 மணிநேரத்திற்கு லக்கேஜிக்கு ரூ.20 கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன.
நாடுமுழுவதும் அம்ரித்பாரத் திட்டத்தின்கீழ் 508 ரயில்நிலையங்கள் ரூ.24,470 கோடியில் புதுப்பிக்கும் பணியை கடந்த ஆண்டு பிரதமர் மோடி துவக்கிவைத்தார். அதன்படி தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகர்கோவில் உள்ளிட்ட 18 ரயில்நிலையங்கள் ரூ.515 கோடியில் புதுப்பிக்கும் பணி துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
அதன்படி விழுப்புரம் ரயில்நிலையத்தில் ரூ.23.50 கோடியில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ரயில்நிலைய நுழைவுவாயில், அனைத்துவசதிகளுடன்கூடிய ஓய்வறை கட்டுதல், புதியகடை வளாகங்கள், நகரும் நடைமேடைகள், லிப்ட் வசதிகள், பயணிகள் தகவல் காட்சி அமைப்பு, பொதுஅறிவிப்பு அமைப்பு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே அம்ரித்பாரத் திட்டத்தில் ரயில்வே பாதுகாப்புபடை பிரிவு காவல்நிலையம், ரயில்வே இருப்புபாதை காவல்நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. தொடர்ந்து மற்றபணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்ஒருபகுதியாக பயணிகள் குளிர்சாதன வசதியுடன் தங்கும் ஓய்வறையும் கட்டப்பட்டு நேற்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ரூ.70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஓய்வறையில், ஒரேநேரத்தில் 50க்கும் மேற்பட்டவர்கள் தங்கி ஓய்வெடுக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டீலக்ஸ் கழிப்பறை, குளியலறை, பயணிகள் பொருட்கள் வைக்குமிடம் என அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இதனை நேற்று ரவிக்குமார் எம்பி திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். சுமார் 2,800 சதுரஅடி பரப்பளவில் இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. விழுப்புரம் வழியாக 80க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் தலைநகர் டெல்லி முதல் முக்கிய நகரங்களுக்கும், தென்மாவட்டங்களுக்கும் ரயில்வசதிகளை கொண்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்கான கழிப்பறைகளுடன் கூடிய ஓய்வறை திறக்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், அம்ரித் திட்டத்தில் பல்வேறுபணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்ஒரு பகுதிதான் தற்போது குளிர்சாதன வசதிகொண்ட ஓய்வறை திறக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளது. பயணி ஒருவருக்கு ஒரு மணிநேரத்திற்கு குளிர்சாதன அறையில் ஓய்வெடுப்பதற்கு ரூ.30 கட்டணம் செலுத்த வேண்டும்.
சொகுசு ஷோபாக்கள் போடப்பட்டும், தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அதேபோல், டீலக்ஸ் கழிப்பறையில் சிறுநீருக்கு ரூ.2, மலம்கழிக்க ரூ.3 செலுத்த வேண்டும். பயணிகள் பொருட்களை பாதுகாக்க 24 மணிநேரத்திற்கு ரூ.20 கட்டணம் செலுத்த வேண்டும். யாருக்கும் இலவச அனுமதி கிடையாது என்று தெரிவித்தனர்.