மதுரை: கள்ளந்திரியிலிருந்து அழகர்கோவில் வரையிலான சாலையை நான்குவழிச்சாலையாக, ரூ.22 கோடியில் விரிவாக்கம் செய்யும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை துவங்க உள்ளது. அழகர்கோவில், தென் தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்று. 108 திவ்யதேசங்களில் ஒன்றான இக்கோயிலின் மலையில் உள்ள ராக்காயி அம்மன் தீர்த்தம் பாவங்கள் நீக்கும் புனித நீராக பொதுமக்களால் நம்பப்படுவதால், வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதன்படி கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், வாகன நெரிசலை தடுக்கவும் பெரியார் பஸ் நிலையம் துவங்கி அழகர்கோவில் வரையிலான, 21 கி.மீ தூர சாலையை நெடுஞ்சாலைத்துறை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது.
ஏற்கனவே, பெரியார் பஸ் நிலையம் துவங்கி கள்ளந்திரி வரை சாலை விரிவாக்கம் பல்வேறு கட்டங்களாக நடந்துள்ளது. இந்நிலையில், கள்ளந்திரி முதல் அழகர் கோவில் வரை விடுபட்டுள்ள பகுதியை விரிவாக்கம் செய்ய, நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பெரியார் பஸ் நிலையத்திலிருந்து – அழகர் கோவில் வரையிலான சாலையில் நாள்தோறும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும் சென்று வருகின்றன. வாகன போக்குவரத்திற்கேற்ப சாலையின் அகலம் போதியளவில் இல்லாததால், விரிவாக்கம் செய்யும் பணிகள் நடக்கின்றன.
தற்போது, கள்ளந்திரி வரை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள பகுதியில் விரிவாக்கம் செய்ய ரூ.22 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. திட்டத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அரசாணை வெளியீட்டிற்காக துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர். அரசாணை வெளியிடப்பட்டால், உடனடியாக பணிகள் துவங்கும். அதன்பின்பே, விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் மரங்கள், கையகப்படுத்தப்பட வேண்டிய நிலங்கள் குறித்த விவரங்களை தெரிவிக்க முடியும். இவ்வாறு கூறினர்.