சென்னை: கடந்த 2023 ஆண்டின் இறுதியில், எண்ணூர் பகுதியில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையிலிருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதன் காரணமாக, 42க்கும் மேற்பட்டோர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் விதித்தத் தடையின் பெயரில் கோரமண்டல் உரத் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
இச்சிக்கலைத் தாமாக முன்வந்து வழக்காகப் பதிந்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயம், தமிழ்நாடு அரசின் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் ஆகியத் துறைகளிடம் அனுமதிபெற்ற பின் அம்மோனியா குழாய் இயக்கம் தொடரலாம் என்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்ட 33 கிராம மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
இந்நிலையில் அமோனியா வாயுக்கசிவு காரணமாக கடந்த 8 மாதங்களாக மூடப்பட்டிருந்த எண்ணூர் கோரமண்டல் அமோனியா ஆலை, தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தின் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆலையில் அம்மோனியா உற்பத்தியை தொடங்கவில்லை, பாஸ்போரிக் அமிலம் மற்றும் சல்பியூரிக் அமில ஆலைகளின் செயல்பாடுகள் மட்டுமே தொடங்கியுள்ளது என கோரமண்டல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
பாதுகாப்பு நெறிமுறைகள், ஒழுங்குமுறை அதிகாரிகளின் வழிகாட்டுதலுடன் ஆலையின் செயல்பாடு தொடங்கி உள்ளது, நிறுவனத்தின் பெயரை உள்ளடக்கிய ஒரு சில அறிக்கைகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை என கோரமண்டல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.