மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அங்காளம்மன் கோயிலில் அம்மாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. அச்சிறுப்பாக்கம் பஜார் பகுதியில் உள்ள அங்காளம்மன் கோயிலில் ஆடி அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இந்த நிகழ்ச்சியானது நேற்றுமுன்தினம் காலை மங்கல இசையுடன் தொடங்கியது. இதில், அங்காளம்மனுக்கு அபிஷேக அலங்கார ஆராதனைகளும் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, அன்று மாலை உற்சவர் அங்காளம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், அம்மனை ஊஞ்சலில் வைத்து ஏராளமான பக்தர்கள் தாலாட்டி வணங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.