Thursday, November 30, 2023
Home » அம்மாவின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றணும்!

அம்மாவின் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றணும்!

by Nithya

நன்றி குங்குமம் தோழி

சின்னத்திரை புகழ் இந்து

‘‘சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் தொடரில் ‘சில்லு’ என்று மக்களின் மனதில் இடம் பிடித்தவர் இந்து. வில்லி கதாபாத்திரம் என்றாலும் அதில் கிடைத்த பாராட்டுதான், அதே தொலைக்காட்சியில் ‘மீனா’ ெதாடர் மூலமாக மக்கள் மனதில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது கலைதுறையின் பயணம் மற்றும் தோழிகள் குறித்து மனம் திறந்தார். ‘‘சொந்த ஊர் ஆந்திரா. ஆனால் பிறந்தது வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். என் பாட்டி வேலை தேடி சென்னைக்கு வந்தாங்க. பசங்கள காப்பாத்த வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவில் நுழைந்தாங்க. அவரைத் தொடர்ந்து அம்மாவும் இதே துறைக்கு வந்துட்டாங்க. அம்மா ஆரம்பத்தில் நடனக் குழுவில் இருந்தாங்க.

அப்பாவும் அதே துறை என்பதால், பாட்டி என் அம்மாவுக்கு அப்பாவை திருமணம் செய்து வச்சாங்க. அம்மா கல்யாணத்திற்குப் பிறகு சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிச்சு வராங்க. என் அண்ணன் சினிமாவில் அசிஸ்டென்ட் கொரியோகிராபரா வேலை பார்த்து வருகிறார். எனக்கு ஒரு அக்காவும் இருக்கா. அவளுக்கு கல்யாணமாகிடுச்சு. அம்மாவும் அப்பாவும் இந்த துறையில் ரொம்பவே கஷ்டப்பட்டுதான் முன்னேறி வந்தாங்க. அந்த கஷ்டம் நாங்களும் படக்கூடாதுன்னு நினைச்சாங்க. அதனால்தான் எங்களுக்கு அந்த வாசமே இருக்கக்கூடாதுன்னு எங்க மூணு பேரையும் பார்த்து பார்த்து வளர்த்தாங்க. ஆனால் அண்ணனை தொடர்ந்து நானும் இந்த துறைக்கு வந்துட்டேன்’’ என்றவருக்கு இன்டீரியர் துறையில் ஒரு நிறுவனம் துவங்க வேண்டும் என்பதுதான் கனவாம்.

‘‘பட்டப்படிப்பு முடிச்சிட்டு எனக்கு 9-5 வேலையில் ஈடுபட விருப்பமில்லை. அதனால் கல்லூரி கேம்பஸ் தேர்வில் நான் கலந்து கொள்ளவில்லை. என் தோழிகள் எல்லாம் வேலையில் சேர்ந்திட எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல. வேறு நிறுவனங்களுக்கு நேர்காணல் செல்லவும் விருப்பமில்லை. இன்டீரியர் டிசைனிங் படிச்சேன். படிப்பு முடிச்சிட்டு ஆறு மாசம் அந்த துறை சார்ந்த நிறுவனத்தில் வேலை பார்த்தேன். ஆனால் அதற்குள் கோவிட் பாதிப்பு ஏற்பட்டதால், அப்படியே நான் லாக்காகி நின்றுவிட்டேன். கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் சகஜ நிலைக்கு வந்தாலும், நான் மீண்டும் முயற்சி செய்யவே இல்லை. என் வேலை முடங்கி போனதால் நான் ஒருவித டிப்ரஷனுக்கு தள்ளப்பட்டேன்.

என் அறையை விட்டு வெளியே வரமாட்டேன். வீட்டில் என்ன செய்யப்போறேன்னு கேட்டாலும், என்னிடம் பதில் இருக்காது. உறவினர் வீட்டு விசேஷத்திற்கும் போக மாட்டேன். என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். அந்த நேரத்தில்தான் என் அக்காவிற்கு திருமணம் நிச்சயமாச்சு. எனக்கு மனசுக்கு சங்கடமா இருந்தாலும் சந்தோஷமா இருந்தாலும் அக்காகிட்டதான் சொல்வேன். அவளும் இப்ப இல்லை. அப்பதான் என் மண்டையில் ஒரு பெரிய சுத்தி வைத்து அடித்தது போல் இருந்தது.

எல்லாரும் ஒரு வேலை இல்லைன்னா மற்றொரு வேலைன்னு அடுத்த கட்டம் நோக்கி நகரந்து கொண்டே இருக்காங்க. நான் மட்டும்தான் அப்படியே பின் தங்கி இருக்கேன். இதில் இருந்து நானாகத்தான் வெளியே வரணும்னு நினைச்சேன். எனக்கான வாழ்க்கை இருக்கு. அதை நான்தான் தேர்வு செய்யணும்னு முடிவு செய்தேன். உடனே இன்ஸ்டா பக்கத்தில் என்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டேன். மாடலாக போட்டோ ஷூட் செய்தேன்.

ஆரம்பத்தில் எங்க வீட்டில் எதிர்ப்பு இருந்தாலும், என்னுடைய பிரைடல் போட்டோ ஷூட் பார்த்த பிறகுதான் அம்மா சமாதானம் ஆனாங்க. அதன் பிறகு அவங்களே என் புகைப்படத்தை இயக்குனர்களிடம் காண்பிச்சாங்க. அதன் அடிப்படையில் எனக்கு ஆடிஷனுக்கான வாய்ப்பு வந்தது’’ என்றவர் அதில் ஏற்பட்ட கசப்பான நிகழ்விற்கு பிறகுதான் இந்த துறையில் தனக்கான அடையாளத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.

‘‘எனக்கு நடிப்பு வராது. கேமரா பார்க்க தெரியாது. டயலாக் மட்டும் பேசிடுவேன். ஆடிஷனில் என்ன செய்ய போறோம்னு பயமா இருந்தது. ஒரு எமோஷனல் சீன். நடிக்க சொன்னாங்க. எனக்கு அழுகையே வரல. அதனால் ஹீரோயின் ரோல் வேண்டாம்னு சொல்லி வில்லி ரோலுக்கு செலக்ட் செய்தாங்க. மறுநாள் லுக் டெஸ்ட். பெரிய டயலாக்கை ஆக்‌ஷனோட பேசணும். நடிப்பு சிம்பிள்னு நினைக்கிறோம். அது அப்படி இல்லை.

ரொம்ப கஷ்டம்னு அப்பதான் புரிந்தது. எனக்கு என்ன செய்யணும்னு ெதரியல. கொஞ்சம் தடுமாறினேன். அதைப் பார்த்து அங்கிருந்தவர் என்னிடம் கடுமையா பேசிட்டார். எனக்கு ரொம்பவே கஷ்டமாயிடுச்சு. அப்படி சொன்னவர் முன் நான் இதே துறையில் எனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்தணும்னு நினைச்சேன். அதனை தொடர்ந்து மறுபடியும் போட்டோஷூட் எல்லாம் செய்தேன். இரண்டு மாசம் கழிச்சு அம்மா நடிச்ச சீரியலில் எனக்கு வாய்ப்பு வந்தது.

லுக் டெஸ்டுக்கான அழைப்பு வந்தது. அங்க இரண்டு சீரியலின் இயக்குனர்களான நந்தக்குமார் சார் மற்றும் கார்த்திக் சார் இருந்தாங்க. இருவரும் நான் என்ன செய்யணும்னு சொல்லிக் கொடுத்தாங்க. அவங்க சொன்னதை செய்தேன். அக்கா கதாபாத்திரம் வில்லி கதாபாத்திரமா மாறியது. அந்த கதாபாத்திரம் செய்ய முடியுமான்னு தயக்கம் இருந்தது. அம்மா தான் தைரியம் சொன்னாங்க. அப்படித்தான் நான் சின்னத்திரையில் நுழைந்தேன். ஆரம்பத்தில் தயக்கம் இருந்தாலும், இப்போது இந்த வேலையை ரொம்பவே பிடிச்சு செய்றேன்.

முதல் இரண்டு சீரியலிலும் வில்லி கேரக்டர் தான். அதைப் பார்த்து தான் ஆனந்தராகத்தில் வாய்ப்பு வந்தது. ஷில்பாவாக நுழைந்தேன். அந்த கதாபாத்திரம்தான் எனக்கான அடையாளத்தை கொடுத்தது. என்னதான் என்னை சோஷியல் மீடியாவில் திட்டினாலும், சில்லுன்னு மக்கள் என்னிடம் அன்பை பொழிந்தாங்க. ஷில்பா கதாபாத்திரத்தை தொடர்ந்து மறுபடியும் சன் தொலைக்காட்சியில் எனக்கு மீனா மூலம் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. இதே போன்ற ஒரு லீட் ரோலில் என்னால் நடிக்க முடியாதுன்னு சொல்லித்தான் ரிஜெக்ட் செய்தாங்க. இப்ப அதற்கான வாய்ப்பு வந்திருக்கு, என்னை நான் நிரூபிக்க ஒரு நல்ல தருணம்னு நினைச்சேன்.

இப்போது மீனாவாக வலம் வருகிறேன்’’ என்றவர் தன் பள்ளிப் பருவ காலங்கள் குறித்து விவரித்தார்.‘‘எங்க வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் பள்ளியில்தான் நான் படிச்சேன். அப்பாதான் என்னை அழைத்துக் கொண்டு போவார். எனக்கு பத்தாம் வகுப்பு வரை பெரிய அளவில் நண்பர்கள் கிடையாது. +1 மற்றும் +2 வில் ஒரு மினி கேங் உருவாச்சு. சிவசங்கரி, கீர்த்தனா, மோனிஷா இவங்கதான் என்னோட ஃபிரண்ட்ஸ். நாங்க வெளியே அதிகம் போகமாட்டோம். அப்பதான் சென்னை வடபழனியில் ஃபோரம் மால் திறந்திருந்தாங்க.

விடுமுறை நாட்களில் நாங்க ஃபிரண்ட்ஸ் எல்லாரும் அங்க தான் இருப்போம். ஒரு முறை சென்னை பல்கலைக்கழகம் போன போது தான் நான் தனியா பஸ்சில் பயணம் செய்தேன். அங்க வேலை முடிந்ததும், எல்லாரும் பீச்சுக்கு போனோம். எங்க வீட்டிலேயே அதற்குள் எங்க இருக்கேன்னு கேட்டு போன் செய்திட்டாங்க. மத்தபடி பள்ளிக் காலத்தில் ஃபிரண்ட்ஸ் வீட்டுக்கு போவேன். அவங்க என் வீட்டுக்கு வருவாங்க. அவ்வளவுதான். பள்ளி முடிஞ்சதும் எல்லாரும் ஒரே கல்லூரியில் படிக்கலாம்னுதான் நினைச்சோம்.

ஆனால் முடியல. நான் எப்பவும் போல எங்க வீட்டுப் பக்கத்தில் இருந்த கல்லூரியில் சேர்ந்தேன். முதல் வருஷம் ரொம்பவே போரிங்கா இருந்தது. எப்ப கல்லூரி நேரம் முடியும் வீட்டுக்கு ேபாகலாம்னு காத்துக் கொண்டு இருப்பேன். அப்ப என்னோட பள்ளியில் படிச்ச பத்மா, மோனிகா, மயூரி, ஹேமா இவங்களும் என் கல்லூரியில் படிச்சாங்க. அடுத்த இரண்டு வருஷம் எப்படி போனதுன்னே தெரியல. அப்புறம் இன்டீரியர் டிசைனிங் படிக்கும் போது ரொம்ப க்ளோசா ஆனது காயத்ரி.

முதலில் நாங்க பேசிக்கவே இல்லை. பேச ஆரம்பிச்ச பிறகு, அவளோட ஸ்கூட்டியில் சென்னை முழுதும் எனக்கு சுத்தி காண்பிச்சா. சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கிற எல்லா சாட் கடையிலும் நாங்க சாப்பிட்டு இருக்கோம். இப்பகூட எனக்கு மனசு கஷ்டமா இருந்தா அவளுக்கு போன் செய்திடுவேன். ஆனால் நான் சீரியலில் நடிக்க வந்த பிறகு யாரிடமும் பேச நேரமே இல்லை. ஒரு நாள் எல்லாரையும் சந்திக்கணும்.

ராஜகுமாரி செட்டில் எனக்கு ரொம்ப க்ளோசானது அயூப். அவங்க குடும்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு நாள் ஷூட் இல்லைன்னா அவர் குடும்பத்தோட வெளியே போயிடுவார். எங்க இருக்கார்னே தெரியாது. அவரோட பையன் என்னை பூமிகான்னுதான் கூப்பிடுவான். ஆனால் என்னைப் பார்த்தால் வெட்கப்பட்டு ஓடிடுவான். சொல்ல மறந்த கதையில் காரத்திக், விஷ்ணு, ஷரத் இவங்க கூட தான் எப்போதும் செட்டில் அரட்டை அடிச்சிட்டு இருப்பேன்.

ஆனந்த ராகத்தில் என்னுடையது சின்ன ஃபோர்ஷன்தான் என்றாலும் அனுஷா மற்றும் ஸ்வேதா இரண்டு பேரும் ரொம்பவே க்ளோசாயிட்டாங்க. நிறைய விஷயங்களை நாங்க ஷேர் செய்துப்போம். மீனா சீரியல் பொறுத்தவரை எல்லாரையும் ரொம்ப பிடிக்கும். இந்த டீம்காக ஒரு வாட்ஸப் க்ரூப் வச்சிருக்கோம். எப்போதும் ரகளையாதான் இருக்கும். அவ்வளவு நாட்டியா இருப்பாங்க. முதலில் கொஞ்சம் பயமா இருந்தது. அபிஷேக் சார், சோனியா மேம், விக்னேஷ் சார், தீபா அக்கா, குறிஞ்சி அண்ணா, சுஜா அம்மா எல்லாரும் சீனியர் ஆர்டிஸ்ட். ஆனா, இப்ப எல்லாரும் ரொம்பவே நெருக்கமாயிட்டோம். இவங்களோட வெளியே நாங்க எங்கேயும் போனதில்லை.

செட்டில் யாருக்காவது பிறந்தநாள்னா எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோம். அப்புறம் ஷூட் முடிஞ்சாலும் எல்லாரும் இருந்து பேசிட்டு இருப்பாங்க. எனக்கு முடிஞ்சாலும் விடமாட்டாங்க. இப்ப எல்லாரும் வெளியே போகலாம்னு பிளான் செய்திட்டு இருக்கோம்.என்னுடைய எதிர்காலம் இன்டீரியர்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் இதற்குள் எப்படி வந்தேன்னு தெரியல. இப்பதான் ஒரு வருஷமாகி இருக்கு. நான் ரொம்ப ரிசர்வ் டைப்.

சென்சிடிவ் கூட. ஆனால் இந்த துறைக்கு வந்த பிறகுதான் எனக்குள் நிறைய மாற்றம் ஏற்பட்டது. அந்த மாற்றம் எனக்கு பிடிச்சிருக்கு. மேலும் இன்னும் நல்ல கதாபாத்திரம் செய்யணும். அப்புறம் என்னோட அம்மாவின் சின்னச் சின்ன ஆசைகளை பூர்த்தி செய்யணும். அவங்க எங்களுக்காக நிறைய கஷ்டப்பட்டு இருக்காங்க. பல விஷயங்களை வேண்டாம்னு தவிர்த்து இருக்காங்க. வீடு கட்டிய பிறகுதான் கல்யாணம்னு ரொம்ப உறுதியா இருந்து எங்க வீட்டை கட்டிய பிறகுதான் அம்மா கல்யாணம் செய்துகிட்டாங்க.

25 ரூபாய்க்கு ஒரு ஸ்கர்ட் கூட அடம் பிடிச்சிதான் வாங்கி இருக்காங்க. கஷ்டப்பட்டுதான் எங்களை கொண்டு வந்திருக்காங்க. அவங்களுக்கு என்ன வேணும்னு சொல்லக்கூட மாட்டாங்க. இப்பவும் நாங்க நல்லா செட்டிலாகணும்னு எண்ணம்தான் அவங்களுக்கு. அதனால அவங்களோட சின்ன ஆசைகளை நான் நிறைவேத்தணும்’’ என்றார் இந்து.

தொகுப்பு: ப்ரியா

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?