காரைக்குடி: அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் எடப்பாடி பழனிசாமி சிக்கியுள்ளார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் நேற்று நடந்த திமுக சார்பு அணிகள் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் மு.தென்னவன், எம்எல்ஏ தமிழரசி முன்னிலை வகித்தனர். திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி, வழக்கறிஞரணி, மகளிர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, மகளிர் தொண்டரணி, தொழிலாளர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு என 23 சார்பு அணிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுகவில் 25 அணிகள் உள்ளன. ஆனால் அதிமுகவின் நிலையோ, அவர்களின் கட்சியே 25 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. நமது கொள்கை கடமை, கண்ணியம், கட்டுபாடு இதுதான் திமுகவின் அடையாளம். ஆனால் அதிமுகவில் பார்த்தால் யாரும் எடப்பாடி பழனிசாமிக்கு கட்டுப்படுவது கிடையாது. அவருக்கு கண்ணியமாக இருப்பது கிடையாது. அதிமுகவில் உள்ள அனைத்து அணிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே நபர் டெல்லியில் உள்ள அமித்ஷா. அவருக்குத்தான் அவர்கள் கட்டுப்பட்டு இருப்பார்கள். அவரின் கட்டுப்பாட்டில் தான் இன்று ஒட்டுமொத்த அதிமுகவும் உள்ளது.
அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் இன்று எடப்பாடி பழனிசாமி சிக்கியுள்ளார். எல்லா வகையிலும் பாஜவுக்கு சவாலாக உள்ளவர் இந்தியாவிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். 10 நாட்களுக்கு முன்னர் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா மதுரைக்கு வந்தார். திமுக ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் நடப்பதாக கூறினார். ஊழலால் தண்டிக்கப்பட்ட அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சியின் தலைவர் கூறியுள்ளார். ஊழலால் பலமுறை தண்டிக்கப்பட்டவர்கள் அதிமுகவினர். அவர்களுடன் கூட்டணி வைத்துவிட்டு நமது கட்சியை பற்றி கூறுகின்றனர்.. நாம் ஒவ்வொரு அணியாக சரியாக திட்டமிட்டு அதிமுக, பாஜ கூட்டணியை வீழ்த்த வேண்டும். சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட 4 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
* 1,512 பேருக்கு ரூ.24 கோடியில் நலத்திட்ட உதவி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கானூர் கால்வாய் மூலம் விவசாய நிலங்கள் பயன்பெறும் வகையில் வைகையாற்றின் குறுக்கே ரூ.40.70 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை துணை முதல்வர் பார்வையிட்டார். பின்னர் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான பல்வேறு உயர் அலுவலர்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு துறைரீதியாக ஆய்வு செய்தார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக மைதானத்தில் நடைபெற்ற நலத்திட்ட உவிகள் வழங்கும் விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1,512 பயனாளிகளுக்கு ரூ.24 கோடியே 24 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.