சைபாசா: கடந்த 2018ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடந்த போது, அப்போதைய பாஜக தேசியத் தலைவராக இருந்த அமித் ஷா குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது ராகுல்காந்தி, ‘கொலை குற்றச்சாட்டு ஆளானவர் கூட பாஜக-வின் தேசியத் தலைவராகலாம்; ஆனால் காங்கிரஸ் கட்சியில் அதற்கு சாத்தியமில்லை’ என்று விமர்சித்து இருந்தார். ராகுல்காந்தி கூறிய இந்த கருத்துக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் பிரதாப் கடியார் என்பவர் ஜார்கண்ட் மாநிலம் சைபாசா நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அதில், ராகுல்காந்தியின் இந்தக் கருத்து அவதூறாகவும், பாஜக தொண்டர்களை அவமானப்படுத்துவதாகவும் உள்ளது என்று தெரிவித்திருந்தார். இம்மனு சைபாசா எம்பி – எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘வரும் ஜூன் 26ம் தேதி ராகுல்காந்தி இந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்; அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர இயலாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுகிறது’ என உத்தரவிட்டு, அவரது வழக்கறிஞரின் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய மனுவை நிராகரித்தார். இந்த வழக்கில், ஏற்கனவே கடந்த 2022 ஏப்ரலில் ஜாமீன் பெறக்கூடிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜராகாததால், 2024 பிப்ரவரியில் ஜாமீன் வெளியே வர இல்லாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
அவரது வழக்கறிஞர்கள் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் விலக்கு கோரி மனு தாக்கல் செய்து, தற்காலிக நிவாரணம் பெற்றிருந்தனர். ஆனால் 2024 மார்ச்சில் உயர் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து, விசாரணையை தொடர அனுமதித்தது. மீண்டும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய மனுவும் நிராகரிக்கப்பட்டது. இதேபோல், உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூரில் மற்றொரு அவதூறு வழக்கும் ராகுல் காந்திக்கு எதிராக நடைபெறுகிறது.