சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவிலேயே பாஜ காலூன்ற முடியாத வகுப்புவாத எதிர்ப்பு மாநிலமாக தமிழ்நாடு இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கடி தமிழ்நாடு வருகை புரிந்து வருகிறார். மதுரையில் நடைபெற்ற பாஜ கூட்டத்தில் 2026ல் பாஜ கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று பேசியிருக்கிறார். தமிழகத்தின் கள நிலவரத்தை முற்றிலும் அறியாமல் பகல் கனவு காண்கிற வகையில் அவர் பேசியிருக்கிறார். தமிழ்நாடு மக்களின் நலனுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிற ஒன்றிய பாஜ அரசை தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள்.
அமித்ஷா பேசும் போது, தமிழ் மொழில் பேச முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படுவதாக நாடகமாடியிருக்கிறார். தேசிய கல்விக் கொள்கையின் மூலம் இந்தி திணிப்பை எதிர்த்த தமிழ்நாட்டிற்கு சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் மூலம் ஒதுக்க வேண்டிய ரூ.2152 கோடியை ஒதுக்காமல் வஞ்சித்ததற்கு அமித்ஷா என்ன பதில் கூறப் போகிறார் ? இந்தி மொழியை தமிழ்நாட்டின் மீது திணிக்க கங்கணம் கட்டி செயல்படும் அமித்ஷாவினுடைய கபட நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டில் மக்கள் பேராதரவோடு நடைபெற்று வருகிற மு.க.ஸ்டாலின் தலைமையிலான நல்லாட்சியை குறை கூறுவதற்கு அமித்ஷாவுக்கு எந்த உரிமையும் இல்லை. அதிகமான நிதியை தமிழ்நாட்டு மக்களிடம் இருந்து வஞ்சித்து, வாட்டி வதைத்து வசூலித்து விட்டு தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கியதாக அமித்ஷா கூறுவதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது ? இதற்கு அமித்ஷா பதில் கூறுவாரா ? எனவே, தமிழ்நாட்டு மக்களை தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தி வருகிற பாஜவின் மாய்மால அரசியல் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது. தமிழ்நாட்டில் பாஜ ஆட்சி என்பது கானல் நீராகத் தான் இருக்கப் போகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.