சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா எனக் கேட்ட அமித்ஷா தமிழ், தமிழர்கள் என மதுரையில் வந்து கபட வேடம் தரிக்கிறார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஒடிசா, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி போல தமிழ்நாட்டிலும் பாஜ ஆட்சி மலரும் எனச் சொல்லியிருக்கிறார் அமித்ஷா. கடந்த ஆண்டு நடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலைத் தமிழர்கள் எப்படி மறப்பார்கள். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு நெருக்கமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டியனை பாஜவினர் எப்படியெல்லாம் மோசமாக விமர்சித்தார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என அமித்ஷா சீறினார். இப்போது தமிழ், தமிழர்கள் என மதுரையில் வந்து கபட வேடம் தரிக்கிறார். ஒடிசாவில் ஆட்சியைப் பிடித்தது போலத் தமிழ்நாட்டைப் பிடிப்பார்களாம். ஒடிசாவின் லட்சணம்தான் இந்தியாவுக்கே தெரியுமே. பாஜ ஆட்சி எப்படி இருக்கும் என்பதை மணிப்பூரில் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறோமே. மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியாத பாஜ, தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மணிப்பூராக மாற்றிவிடுவார்கள்.
அமித்ஷாவுக்கு 2021 சட்டமன்றத் தேர்தல் மறந்து விட்டது போலும். மோடியின் பெயரைக் கூட போடாமல் விளம்பரம் செய்த பாஜகவினர் கதைகள் நிறைய இருக்கிறது. அந்த வெறுப்பு அடங்கவில்லை என்பதைத்தான் அடுத்து வந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவும் காட்டியது. தமிழர்களையும் தமிழ்நாட்டையும் தொடர்ந்து வஞ்சிக்கும் பாஜக மீது அது இன்னும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது. தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிப்பதும் தமிழ்நாட்டுக்கான நிதி உரிமையை மறுப்பதும் தங்களுக்கு வாக்களிக்காத தமிழ்நாட்டு மக்களைப் பழிவாங்குவதற்காக பாஜக எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் பாஜக மீது தமிழ்நாட்டு மக்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலிலும் வாக்குச்சாவடியில் பாஜகவினருக்கும் அவருக்கும் துணை போகிறவர்களுக்கும் சரியான தீர்ப்பைத் தமிழர்கள் எழுதுவார்கள். தேர்தலில் வெல்வது அல்ல அவர்களின் நோக்கம். அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளைக் கபளீகரம் செய்து அந்த இடத்திற்கு பாஜக வர வேண்டும் என்பதே அவர்களின் ஒற்றை இலக்கு.
எத்தனை ‘ஷா’ கள் வந்தாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் செய்ய முடியாது. 2018ம் ஆண்டு தமிழ்நாட்டின் நலனை முன்னிறுத்தித் தொடங்கிய திமுக தலைமையிலான கூட்டணி 13 தேர்தல்களை சந்தித்து வெற்றி பெற்றது. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற திமுக கூட்டணி 2026 தேர்தலில் மட்டுமல்ல அதன் பிறகு வரும் தேர்தல்களிலும் தொடர் வெற்றியைப் பெறும்.