மதுரை: அதிமுகவுடன் இணைந்தபோதும், பாமக, தேமுதிக கட்சிகளின் தொடர் இழுபறியால் கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் மதுரை பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் மட்டும் பங்கேற்றுவிட்டு, விரக்தியுடன் அமித்ஷா டெல்லி திரும்பினார். தமிழ்நாட்டில் 2026ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. கட்டுக்கோப்பான நிலையில் திமுக கூட்டணி தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் வாய்ப்பும் இருக்கிறது. தேர்தல் பணிகளை திமுக விறுவிறுப்பாக துவக்கி விட்டது. கடந்த வாரத்தில் பொதுக்குழுக் கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் என பணிகளை மும்முரமாக செய்து வருகிறது. எனவே, தமிழ்நாட்டில் பாஜ, அதிமுக கூட்டணியை வலுப்படுத்தவும், மேலும் சில கட்சிகளை கூட்டணியில் சேர்க்கவும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி கவனம் செலுத்தி வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ தனி அணியாகவும், அதிமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மற்றொரு கூட்டணியாகவும் போட்டியிட்டன. அந்த தேர்தலில் அதிமுக கூட்டணியும், பாஜ கூட்டணியும் தமிழ்நாட்டில் ஒரு இடம் கூட பெற முடியாமல் படுதோல்வியடைந்தன. இதையடுத்து, அதிமுகவை தங்கள் கூட்டணிக்குக் கொண்டு வரும் முயற்சியை பாஜ துவங்கியது. ஆரம்பத்தில் பிடிகொடுக்காமல் இருந்த எடப்பாடி பழனிசாமி, பாஜவுடன் கூட்டணி கிடையவே கிடையாது என திட்டவட்டமாக அறிவித்தார். ஆனால், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மிரட்டல்களை அடுத்து, வேறு வழியின்றி ெடல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பாஜவுடன் கூட்டணியை உறுதி செய்தார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக கூட்டணியை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் அமித்ஷா சென்னை வந்தார். அவரது வருகையின் போது பாமக, தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் மேடையில் ஏற்றிக் காட்டவேண்டும் என்று பாஜ கட்சியினர் கடுமையாக முயற்சி செய்தனர். ஆனால், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் பிடிகொடுக்காத நிலையில், அதிமுகவுடன் கூட்டணியை மட்டும் அறிவித்து விட்டு ஏமாற்றத்துடன் அமித்ஷா டெல்லி திரும்பினார். இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஜூன் 8ம் தேதி (நேற்று) பாஜ மாநில மையக்குழுக் கூட்டம் மற்றும் தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக அமித்ஷா நேற்றுமுன்தினம் இரவு மதுரை வந்தார். நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த அவர், பிற்பகலில் தங்கியிருந்த விடுதியில் மாநில மையக்குழு கூட்டத்தில் பாஜ நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார். அப்போது, இம்முறை 50 தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டுப் பெற்று போட்டியிட வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.
மாலையில், ஒத்தக்கடை பகுதியில் தென்மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி ஆட்சி என்று மீண்டும் அமித்ஷா திட்டவட்டமாக பேசிச் ெசன்றார். மையக்குழு மற்றும் தென்மாவட்ட நிர்வாகிகள் சந்திப்புக்காக அமித்ஷா மதுரை வருகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், அவரது உண்மையான நோக்கம் தமிழகத்தில் தங்கள் கூட்டணி குறித்து இம்முறை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடவேண்டும் என்பதுதான். பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை பேசி சரிக்கட்டி, மதுரை கூட்டத்தில் பாஜ கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியிட்டாக வேண்டும் என அமித்ஷா உறுதியாக இருந்தார். கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து அமித்ஷாவுடன் மேடையில் ஏற்றும் விஷயத்தில் கடந்தமுறை தவற விட்டதை இந்த முறை சரி செய்து விடும் எண்ணத்தில் பாஜ தமிழக நிர்வாகிகளும் தீவிரமாக களமிறங்கினர்.
குறிப்பாக, பாமகவுடன் கூட்டணியை மதுரை கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விடவேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக இருந்ததாகத் தெரிகிறது. ராமதாஸை வழிக்குக் கொண்டு வருவதற்காக பாஜ தூதர் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுகவின் சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரம் இல்லம் சென்று ராமதாசை சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது, அன்புமணி மீதான வழக்குகள் பற்றி பேசப்பட்டிருக்கிறது. பாஜ கூட்டணிக்கு வராத பட்சத்தில் அன்புமணி மீது உள்ள சிபிஐ வழக்கு மற்றும் அன்புமணி மூலம் பாமகவை உடைப்பது உள்ளிட்ட அபாயங்கள் இருப்பதும் புரிய வைக்கப்பட்டிருக்கிறது. இதன்பின், அன்புமணியுடனும் குருமூர்த்தி சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆனாலும் ராமதாஸ் வழிக்கு வரவில்லை. இந்நிலையில், டெல்லி மேலிடம் அழுத்தத்தால் அவசர அவசரமாக நேற்று முன்தினம் சென்னைக்கு வந்த ராமதாஸ் மீண்டும் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமியை ரகசியமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின் ராமதாஸ், கூட்டணி குறித்து தனது முடிவை அறிவிப்பார் என்று காத்திருந்தனர். ஆனால், வழக்கம்போல் புரியாத புதிராய் பேட்டியளித்துவிட்டு, 3 மாதத்தில் முடிவை சொல்வதாக கூறிவிட்டு சென்றார். இதேபோல, ராஜ்யசபா சீட் கிடைக்காத விரக்தியில் தேமுதிகவும் கடும் அதிருப்தியில் இருக்கிறது.
கூட்டணி தொடர்பாக இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை என பிரேமலதா அறிவித்து விட்டார். ஆகவே, தேமுதிகவுடன் பேசியும் பலனில்லை. இதனால், கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் அமித்ஷாவின் முயற்சி இரண்டாவது முறையாக இம்முறையும் தோல்வியடைந்தது. இது அமித்ஷாவுக்கு கடும் ஏமாற்றத்தையும், விரக்தியையும் ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது. இதன் எதிரொலியாகவே, மதுரையில் தன்னை சந்திக்க ஓபிஎஸ், டிடிவி தினகரன் உள்ளிட்டோருக்கு அவர் அனுமதி தரவில்லை என்றும் தெரிகிறது. அமித்ஷாவை சந்திக்க நேரம் கிடைக்காததால் இவர்கள் இருவரும் அதிருப்தியடைந்துள்ளனர். கடந்த முறை சென்னை வருகையின் போது அமித்ஷாவை சந்திக்க முடியாதது ஏமாற்றம் என பகிரங்கமாக பேட்டி கொடுத்திருந்த ஓபிஎஸ் இம்முறை, ‘அமித்ஷாவை சந்திக்க நேரம் நான் கேட்கவில்லை’ எனக்கூறி சமாளித்திருக்கிறார். இதேபோல், டிடிவி.தினகரனும், ‘நான் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை’ என்று கூறினார். கூட்டணி விவகாரம் கை கூடி வராததால் தனது பாஜ கட்சியினருடன் மட்டும் மாநில மைய கூட்டத்திலும், மதுரை ஒத்தக்கடையில் தென்மாவட்ட, மண்டல கூட்டத்திலும் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி விட்டு, நேற்று மாலை 6.20 மணிக்கு தனி விமானத்தில் அமித்ஷா டெல்லி கிளம்பிச் சென்றார். மிகப்பெரிய வியூகம் வகுத்து, கூட்டணிக் கனவோடு வந்த அமித்ஷா பெரும் விரக்தியுடன் இரண்டாம் முறையும் திரும்பியுள்ளார்.