சென்னை: 60 வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை ஒன்றிய உளவுத்துறை போலீசாரின் நடவடிக்கையை மீறி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதோடு வழக்குகள் உள்ள போலீசாரை மிரட்டும் வகையில் அமித்ஷாவை சந்தித்த போட்டோவை டிவிட்டரில் வெளியிட்டு, போலீசாருக்கு அனுப்பி வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, மோசடி என்று பல்வேறு குற்றப் பின்னணி கொண்டவர்கள் கடந்த சில மாதங்களாகவே பாஜகவில் இணைந்து வந்தனர். போலீஸ் அதிகாரியாக சிறப்பாக பணியாற்றியதாக கூறும் அண்ணாமலைதான் இந்த குற்றவாளிகளை எல்லாம் கட்சியில் சேர்த்து பொறுப்புகளை வழங்கியுள்ளார். அதில் முக்கியமானவர் மிளகாய் பொடி வெங்கடேசன்(எ) கே.ஆர்.வெங்கடேஷ்.
இவர், தமிழக பாஜகவில் ஓபிசி பிரிவு தலைவராகவும் உள்ளார். இந்தப் பதவிகளை வாங்க அவர் பல கோடிகளை செலவு செய்ததாக கூறப்படுகிறது. வெங்கடேசன் மீது, தற்போது, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் 60 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் ஆந்திரா, தெலங்கானாவில் செம்மரக்கட்டைகள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆந்திரா போலீசாரால் பல முறை கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார்.
சில மாதங்களுக்கு முன்னர் ஆவடி போலீசாரால் கைது செய்யப்பட்டு, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார். இவர் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவ்வளவு வழக்குகள் உள்ளவருக்குத்தான் பாஜகவில் மாநில பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சனிக்கிழமை மதுரை வந்த அமித்ஷாவை சந்திக்க பாஜகவில் உள்ள முக்கிய தலைவர்கள் போட்டி போட்டு விருப்பம் தெரிவித்தனர். மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மட்டுமே அமித்ஷாவை சந்திக்க வேண்டும் என்று மாநில நிர்வாகிகள் முடிவு எடுத்தனர்.
ஆனால் திடீரென இந்த உத்தரவுகளை மீறி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில நிர்வாகி வினோஜ் பி செல்வம் ஆகியோரது ஆதரவுடன் அமித்ஷாவை வரவேற்க நியமிக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழுவில் இடம் பெற்றார். அவர் அமித்ஷாவை மதுரை விமானநிலையத்தில் சால்வை கொடுத்து வரவேற்றார். செம்மரக்கட்டை கடத்தல் உள்பட 60க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய ரவுடியை அமித்ஷா சந்தித்த விவகாரம் கட்சிக்குள் பெரும் பூகம்பத்தை உருவாக்கியது.
குறிப்பாக சென்னையைச் சேர்ந்த முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் போன்றவர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் சென்னை புழல் பகுதியைச் சேர்ந்த ரவுடி வெங்கடேசனுக்கு அனுமதி வழங்கப்பட்டது மூத்த நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதோடு இல்லாமல், அமித்ஷாவை சந்தித்த இரு புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட மிளகாய் பொடி வெங்கடேசன், அதில், ஆவடி காவல்துறை, தமிழ்நாடு காவல்துறை, ஆந்திர காவல்துறை, தெலங்கானா காவல்துறை என அனைவரையும் டேக் செய்து தான் யார் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள் என்று மமதையுடன் பதிவிட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
வழக்குகளை விசாரிக்கும் போலீசாரை மறைமுகமாக மிரட்டும் செயல் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். அமித்ஷாவே என் பின்னால் உள்ளார் என்று அவர் சொல்கிறார் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்படி குற்றப்பின்னணி கொண்ட நபரை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பதற்கு, ஒன்றிய உளவுத்துறை எப்படி அனுமதித்தது? உள்துறை அதிகாரிகளுக்கு போதிய அனுபவம் இல்லையா? அல்லது அவர்களையும் மிளகாய் பொடி வெங்கடேசன் சரிக்கட்டினாரா என்ற சந்தேகங்கள் எழும்புவதாக பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.