மதுரை: கூட்டணி ஆட்சி இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மறுத்து வந்த நிலையில், மதுரையில் நேற்று நடந்த பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாட்டில் 2026ல் பாஜ – அதிமுக கூட்டணி ஆட்சி அமையும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக மீண்டும் பேசி இருப்பது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஒத்தக்கடை பகுதியில் உள்ள தனியார் திடலில் நேற்று மாலை நடந்த பாஜ மாநில, தென்மாவட்ட, மண்டல் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்திற்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது: 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். நான் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும் காதுகளும் சிந்தனைகளும் தமிழகத்தை நோக்கி தான் இருக்கும். ஆபரேஷன் சிந்தூர் வடக்கே நடைபெற்றபோது அந்த நிகழ்ச்சிக்கு ஆதரவும் நாட்டுப்பற்றும் தமிழகத்தில் இருந்து தான் அதிகமாக ஒலித்தது. அப்பாவி மக்களை மதத்தின் பெயரால் கொன்ற தீவிரவாதிகளை பிரதமர் மோடி, அவர்களின் ஊருக்குள்ளேயே சென்று அடித்தார். அதுதான் அவர்களுக்கு பாடம்.
தீவிரவாதிகள் இதற்கு முன் கைவரிசை காட்டியபோது இத்தகைய வீர தீர செயல்களை காட்டவில்லை. ஆபரேஷன் சிந்தூர் மூலம் முப்படையின் வீரத்தையும், தீரத்தையம் வெளிப்படுத்தி வென்றுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அவர்களது வீடு தேடி தாக்குதல் நடத்துவோம்.
ஒடிசா, அரியானா, மகாராஷ்டிராவில் பாஜ மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. 2025ல் டெல்லியிலும் கெஜ்ரிவாலின் ஆட்சியை அகற்றி பாஜ ஆட்சிக்கு வந்தது. டெல்லியில் எப்படி ஆட்சி அமைத்தோமோ அதேபோல, தமிழகத்தில் 2026ல் பாஜ ஆட்சி அமைக்க போகிறோம். உங்கள் காதுகளை திறந்து வைத்து கேளுங்கள், 2026ல் தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் பாஜ கூட்டணி ஆட்சி அமைக்கும். ஜூன் 22ம் தேதி முருகபக்தர்கள் மாநாட்டில் இங்குள்ள அனைவரும் கலந்து ஒற்றுமையை காட்ட வேண்டும். மாநில அரசு தமிழ்மொழியை இன்ஜினியரிங், மருத்துவ பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கடந்த ஏப்ரல் மாதம் சென்னை வந்த அமித்ஷா, கூட்டணிக்கு வர மறுத்த அதிமுகவை, எடப்பாடி மற்றும் மாஜி அமைச்சர்கள் மீது உள்ள சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளை காட்டி மிரட்டி பணிய வைத்தது. இதையடுத்து சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா மற்றும் எடப்பாடி இணைந்து கூட்டணி அறிவிப்பை வெளியிட்டனர். அப்போது அமித்ஷா கூறும்போது, தமிழ்நாட்டில் பாஜ கூட்டணி ஆட்சி அமையும் என்றார். ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘‘அமித்ஷா கூட்டணி ஆட்சி பற்றி எதுவுமே சொல்லவில்லை. தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில்தான் ஆட்சி அமையும்’’ என்று மறுத்து பேசினார். இது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் மதுரையில் நேற்று நடந்த பாஜ நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்நாட்டில் 2026ல் பாஜ – அதிமுக கூட்டணி ஆட்சிதான் அமையும் என அமித்ஷா மீண்டும் திட்டவட்டமாக பேசியிருக்கிறார். அமித்ஷாவின் இப்பேச்சு அதிமுகவினரை கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமித்ஷாவிற்கு முருகன் சிலை, வேல் பரிசாக வழங்கப்பட்டது. கூட்டத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் தமிழிசை சவுந்தர்ராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ, எச்.ராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.