புதுடெல்லி: அமிதாப் ஜெயா பச்சன் என்று சொல்லாதீங்க என்று நடிகையான சமாஜ்வாதி எம்பி ஜெயா பச்சன் மாநிலங்களவையில் கோபத்துடன் கூறினார். நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், சமாஜ்வாதி எம்பியும், பாலிவுட் நடிகையுமான ஜெயா பச்சனை பேச அழைக்கும் போது, ‘திருமதி ஜெயா அமிதாப் பச்சன் அவர்களே… தயவு செய்து நீங்கள் பேசலாம்’ என்றார். அதற்கு கோபத்துடன் பதிலளித்த ஜெயா பச்சன், ‘ஐயா… ‘ஜெயா பச்சன் பேசுங்கள்’ என்று கூறுங்கள். அவ்வாறு அழைத்தால் போதுமானதாக இருந்திருக்கும். அனைத்து எம்பிக்களுக்கும், அவரவருக்கு என்று தனி அடையாளம் உள்ளது.
பெண்கள் தங்கள் கணவர்களின் பெயரால் அறியப்பட வேண்டியதில்லை. இதன்மூலம் பெண்களுக்கு அவர்களின் அடையாளம் கிடைப்பதில்லை. எனவே எனது பெயரை குறிப்பிட்டு அழையுங்கள்’ என்றார். மாநிலங்களவையில் நடந்த விவாதம் தொடர்பான வீடியோயை ஜெயா பச்சன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதற்கு பலரும் பலவித கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கணவரின் பெயரை சேர்க்கலாமா? கூடாதா? என்ற விவாதங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.