* டிடிவி.தினகரன் ஓபிஎஸ்சையும் சந்திக்க முடிவு
* கூட்டணியை இறுதி செய்ய மும்முரம்
மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவை இறுதி செய்திடும் வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மதுரை வருகிறார். அப்போது டிடிவி, ஓபிஎஸ் உள்ளிட்டோரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். திமுக அமைப்பு ரீதியாக தனது கூட்டணியின் தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் மதுரையில் நடந்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் ரோடு ஷோ மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கட்சியினரை மட்டுமின்றி, பொதுமக்களையும் தேர்தல் களத்திற்கு தயார்படுத்தும் வகையில் இருந்தது. திமுக, ஏற்கனவே தன்னுடன் நீண்டகாலமாக பயணித்து வரும் கூட்டணி கட்சியினருடன் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில், இந்த கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடி ஐக்கியம்: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் பாஜ கூட்டணி தனித்தனியாக போட்டியிட்ட நிலையில் இரு கூட்டணியும் படுதோல்வி அடைந்தது. இதனால், அதிமுகவை எப்படியும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்த்து தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டும் என்று பாஜ திட்டமிட்டது. இதற்கு எடப்பாடி பழனிசாமி ஆரம்பத்தில் ஒத்துவரவில்லை. சிபிஐ, அமலாக்கத்துறை நடவடிக்கையால் கூட்டணிக்கு ஒத்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவை இணைக்க முடியாது, டிடிவியுடன் கூட்டணி வைக்க முடியாது என்ற நிபந்தனையில் வெற்றி கண்டார். இதனால், அதிமுக கூட்டணியை உறுதி செய்த அமித்ஷாவின் சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் டிடிவி, ஓபிஎஸ் உள்ளிட்டோரை மேடை ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
ஒருவழியாக அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த நிம்மதியில் அமித்ஷா டெல்லி சென்றதும், தங்களுக்குரிய மனவேதனையை டிடிவியும், ஓபிஎஸ்சும் வெளிப்படுத்தினர். இதையடுத்து இருவரையும் சமாதானம் செய்த பாஜ மாநிலத் தலைவர்கள் டிடிவியும், ஓபிஎஸ்சும் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர் என கூறினர். ஆனாலும் இருவருக்கும் வருத்தம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. பாமகவிற்கு ெகாக்கி: தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவையும் இணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதுதான் அமித்ஷாவின் திட்டம். எப்படியும் பாமகவை கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான பணியை பாஜவினர் தொடர்ந்தனர். தன் மீதான சிபிஐ வழக்குகளை மனதில் வைத்து பாஜ கூட்டணிக்கு அன்புமணி தயாராக உள்ளார். ஆனால் தொடர் தோல்வியால் கட்சியை காப்பாற்ற வேண்டுமென்ற நோக்கத்தில் ராமதாஸ் பாஜ கூட்டணிக்கு தயாராக இல்லை.
கடந்த முறை அதிமுக கூட்டணியையும் உறுதி செய்ய சென்னை வந்த அமித்ஷா, பாமக கூட்டணியை உறுதி செய்ய திட்டமிட்டார். ஆனால், பாஜவுடன் கூட்டணி அமைக்க விரும்பாத ராமதாஸ், பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி நானே தலைவர் என அறிவித்தார். இதனால் பாமகவை பாஜ கூட்டணியில் இணைக்க முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, பாமகவில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடக்கும் போர், பாஜ கூட்டணியை அடிப்படையாக வைத்துதான் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது. பாஜ சமாதானம்: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ராமதாஸ் பிடி கொடுக்காத நிலையில் நேற்று முன்தினம் பாஜவிற்காக மறைமுகமாக பணியாற்றும் ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரத்தில் அவரை சந்தித்து சமாதானம் பேசினர். ஆனால் அதற்கு உடன்படாத ராமதாஸ், பாஜ கூட்டணியே வேண்டாம் என்பதில் விடாப்பிடியாக உள்ளார்.
இந்த சூழலில் ராமதாசை எப்படியாவது சரிக்கட்டி, மதுரை வரும் அமித்ஷாவுடன் சந்திக்க வைப்பது அல்லது பாஜ கூட்டணியில் பாமக சேர்வதை உறுதி செய்ய வைப்பது ஆகிய பணிகளில் பாஜவினரும், மறைமுக தூதர்களும் இரவு, பகலாக தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். ஓபிஎஸ், டிடிவி சந்திப்பு: மதுரை அருகே ஒத்தக்கடையில் நாளை மாலை (ஜூன் 8) நடைபெறும் பாஜ மாநில நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்றிரவு மதுரை வருகிறார். இந்த வருகையின் போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பை உறுதி செய்திடவும், மனவேதனையை போக்கிடும் வகையிலும் இன்று இரவு அல்லது நாளை பகலில் ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மதுரையில் சந்தித்து பேச வைப்பது என முடிவாகியுள்ளது.
இதுகுறித்து உசிலம்பட்டியில் பேட்டியளித்த டிடிவி தினகரன், ‘‘ஒன்றிய அமைச்சர் அமித்ஷா மதுரை வரும் நாளில், நான் திருச்சியில் நடைபெறும் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க உள்ளேன். எனவே அமித்ஷாவை சந்திப்பதா, இல்லையா என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்றார். இதோடு, அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் மதுரையில் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. பாமகவோடு பேசிவரும் அதே நேரத்தில், தேமுதிகவையும் எப்படியாவது பாஜ கூட்டணிக்கு கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில் பாஜவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வெற்றி கிடைக்குமா? அமித்ஷா கடந்த முறை சென்னை வந்தபோது ஒருவழியாக அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த முறை எப்படியாவது பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டே அமித்ஷாவின் மதுரை வருகை திட்டமிடப்பட்டுள்ளது. பாஜ கூட்டணிக்கு அன்புமணி கிரீன் சிக்னல் காட்டி விட்டநிலையில், அவருக்கு நெருக்கமானவர்கள், அவரது பிரதிநிதியாக இன்று அல்லது நாளை அமித்ஷாவை மதுரையில் சந்திக்கலாம் என கூறப்படுகிறது. ஒருவேளை ராமதாஸ் பாஜ கூட்டணிக்கு எதிரான முடிவில் இருக்கும் பட்சத்தில் ஒன்றிய அரசு தரப்பில் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட அமைப்புகளின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றும், இதன் மூலம் பாமகவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் பாஜ திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
ராமதாசை சமரசம் செய்ய பாஜ முயற்சி; அமித்ஷாவை சந்திக்க அன்புமணி திட்டமா?நயினார் பரபரப்பு பேட்டி
மதுரை அருகே ஒத்தக்கடையில் நாளை (ஜூன் 8) நடைபெறும் பாஜ மாநில நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் ேநற்று காலை நடைபெற்றது. இதில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அமித்ஷா சனிக்கிழமை (இன்று) இரவு மதுரை வருகிறார். ஞாயிறன்று காலையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று விட்டு மாலையில் நடைபெறும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மதுரை வரும் அமித்ஷாவை அன்புமணி சந்திப்பது குறித்து இதுவரை எந்த திட்டமும் இல்லை.
இந்த கூட்டத்தில் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்க மாட்டார்கள்’’ என்றார். அப்ேபாது ராமதாஸ் – அன்புமணி சமரச பேச்சுவார்த்தைக்கு குருமூர்த்தியை பாஜ அனுப்பியதா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ‘‘சமரசம் என்ற வார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என முயல்கிறார். அவர் ஒரு நலன் விரும்பி. பாமக எங்கள் கூட்டணியில் இணையும். தேமுதிகவும் எங்கள் கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கை உண்டு’’ என்றார்.