ஜம்மு: பஹல்காம் பதிலடிக்கு மத்தியில் அமர்நாத் யாத்திரை விரைவில் தொடங்க உள்ளதால் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்முவில் முகாமிட்டு 2 நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார். கடந்த 7ம் தேதி முதல் 10 வரை நடந்த மோதல்களில் பாகிஸ்தானின் குண்டுவீச்சு மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் உயிரிழந்த 28 பேரில் 14 பொதுமக்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். நேற்று ஜம்முவில் ராஜ்பவனில் பாதுகாப்பு கூட்டங்களை நடத்திய அமித் ஷா, நேற்று இரவு ஜம்முவில் தங்கினார். இன்று பூஞ்சில் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கிறார். சிங் சபா குருத்வாரா உள்ளிட்ட சேதமடைந்த மத வழிபாட்டுத் தலங்களைப் பார்வையிடுவார். கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் மூன்றாவது முறையாக அமித் ஷா ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின்னர் முதல் பயணம் என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதேநேரம் நேற்று ஜம்முவில் இருக்கும் ராஜ்பவனில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், வரவிருக்கும் அமர்நாத் யாத்ரையின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ராணுவம், துணை ராணுவப் படைகள், காவல்துறை, உளவுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெறுகிறது.
அதற்கான முன் பதிவு ஏப்ரல் 14ம் தேதி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் தொடங்கியது. தீவிரவாத தாக்குதல் நடந்த பஹல்காம் வழியாக அமர்நாத் யாத்திரை பயணம் இருக்கும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முக்கிய ஆலோசனை கூட்டங்களை அமித் ஷா நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.