புதுடெல்லி: மணிப்பூரில் இரண்டு இன மக்களிடையே ஏற்பட்ட மோதலில், இதுவரை 98 பேர் பலியாகினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, மணிப்பூரில் 3 நாட்கள் முகாமிட்டு அமைதி முயற்சிகளை முன்னெடுத்தார். ஆனாலும் மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை. மணிப்பூர் வன்முறைகளை ஒடுக்குவதற்காக 500 பிஎஸ்எப் வீரர்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே மணிப்பூரில் 10,000க்கும் அதிகமான அசாம் ரைபிள்ஸ் படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே குகி தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் பலியானார். அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவை சேர்ந்த 2 வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்நிலையில் மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த வலியுறுத்தி, டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வீட்டை, குகி இனப் பெண்கள் உள்ளிட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினார். அதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.