சென்னை: சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்கு கடைகளை ஒதுக்க வேண்டுமென்ற சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் கோரிக்கை மீது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முடிவெடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வது தொடர்பாக கோரப்பட்ட டெண்டருக்கு தடை விதிக்க கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், நடப்பாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனைக்காக கோரப்பட்ட இரு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு, இறுதியாக கடந்த செப்டம்பர் 29ம் தேதி டெண்டர் கோரப்பட்டது. இதற்காக ரூ.20 லட்சம் முன்பணம், உத்தரவாத தொகை ரூ.2 லட்சத்துடன் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தோம்.
இந்நிலையில், எந்த தகுதியும் இல்லாத ‘சென்னை பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கம்’ என்ற புதிய சங்கம் டெண்டரில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை சமர்ப்பித்த அந்த சங்கத்தை டெண்டரில் கலந்து கொள்ள அனுமதித்தது ஒளிவுமறைவற்ற டெண்டர் சட்ட விதிகளுக்கு முரணானது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தங்களது சங்கத்திற்கு விற்பனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் போதிய அனுபவம் உள்ள நிலையில், பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன புதிய சங்கத்திற்கு டெண்டர் ஒதுக்கியது சட்டத்திற்கு முரணானது என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.விஜய் ஆனந்த் வாதிட்டார்.
அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, டெண்டர் நடைமுறை மற்றும் ஒதுக்கீடு செய்ததில் எந்த தவறும் இல்லை. சென்னை பட்டாசு வியாபாரிகள் நலச் சங்கம் போதிய தகுதிகளை பெற்றுள்ளதாலேயே டெண்டர் ஒதுக்கப்பட்டது. தற்போது 55 கடைகள் பட்டாசு விற்பனைக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 கடைகள் அமைக்கப்படும். மொத்தமுள்ள 60 கடைகளில் 17 கடைகளை மனுதாரர் சங்கத்திற்கு ஒதுக்க தயாராக உள்ளோம், என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, டெண்டர் விதிகளை மாற்றியது தவறு. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடப்பதை தவிர்க்க வேண்டும். இரண்டு சங்கத்தை சேர்ந்தவர்களும் நாளை மதியம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாக இயக்குனர் முன்பு ஆஜராகி கோரிக்கை வைக்க வேண்டும். அவர் இந்த விவகாரம் தொடர்பாக சுமுக தீர்வு காண வேண்டும் என்று உத்தரவிட்டார்.