சென்னை: அமெட் பல்கலைக்கழகம் சார்பில் 10, 12ம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. அமெட் பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் ராமச்சந்திரன் மேரிடைம் பவுண்டேஷன் இணைந்து நடத்தும் செங்கல்பட்டு மாவட்டம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற 250 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா மற்றும் முதியோர் இல்லங்கள், ஆதரவற்ற குழந்தைகள், காப்பகங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் உள்ள அமெட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்ரீ ஜானகிராமன் அரங்கில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு அமெட் பல்கலைக்கழக நிறுவனரும் வேந்தரும், சரஸ்வதி மருத்துவக் கல்லூரி மற்றும் நாசே தொண்டு நிறுவனத்தின் தலைவர் நாசே ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சுசிலா ராமச்சந்திரன் வரவேற்றார். பல்கலைக்கழக தலைவர் ராஜேஷ் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற 250 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை மற்றும் முதியோர், ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்கலைக்கழக நிறுவனர் நாசே ராமச்சந்திரன் உதவிகளை வழங்கினார்.
விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவ, மாணவியர், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பல்கலைக்கழக நிறுவனர் நாசே ராமச்சந்திரன் பிறந்த நாளை முன்னிட்டு மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.