சென்னை: கடல்சார் கல்வியில் முப்aபது ஆண்டுகளுக்கும் மேலாக, முன்னணியில் உள்ள அமெட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து டாக்டர் ஜே.ராமச்சந்திரன் கடல்சார் அறக்கட்டளை, 2024ல் நடத்திய நிகழ்வுகளின் வருடாந்திர தொடர்ச்சியாக அமெட் உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு 2025 மற்றும் அமெட் உலகளாவிய கடல்சார் விருதுகள் 2025 ஆகியவை நேற்று சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 15க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1200க்கும் அதிகமான பிரதிநிதிகள் மற்றும் பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர்.
அமெட் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் மற்றும் வேந்தரான டாக்டர் ராமச்சந்திரன், கடல்சார் கல்வி மற்றும் தலைமைத்துவத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அமெட்டின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். கடல்சார் துறையின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய, ஏஐ, பசுமை கப்பல் போக்குவரத்து மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்கள் மூலம் பொறுப்பான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள கடல்சார் வல்லுநர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அமெட் பல்கலைக்கழகத்தின் தலைவரும், டாக்டர் ராமச்சந்திரன் கடல்சார் அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் ராஜேஷ் ராமச்சந்திரன், டிஜிட்டல் மாற்றம், திறன் மேம்பாடு மற்றும் உலக தரத்தை நிர்ணயிக்கும் இந்தியாவின் கடல்துறை பங்குதாரர்களின் முக்கியப் பங்குகளை வலியுறுத்தி சிறப்புரை நிகழ்த்தினார். நிறைவு விழாவில் பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் தீபா ராஜேஷ் வரவேற்புரையாற்றினார். 2025ம் ஆண்டுக்கான அமெட் பன்னாட்டு கடல்சார் விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை டேவிட் எகிள்ஸ்டன், பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜே. ராமச்சந்திரன் மற்றும் ஏ.பி.மொல்ல்லர் மெர்ஸ்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கரண் கோச்சார் ஆகியோர் சேர்ந்து வழங்கினர்.
சென்னை ஆஸ்திரேலிய தூதரகத்தின் துணைத் தூதுவர் டேவிட் எகிள்ஸ்டன் தலைமை விருந்தினராகப் பங்கேற்று உரையை நிகழ்த்தினார். அமெட் சிட்டி கல்லூரி முதல்வர் கேப்டன் சந்திரசேகர் நன்றியுரை வழங்கினார்.