Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அமெரிக்கா வளைகுடா பெயர் மாற்றத்தை ஏற்க மறுப்பதால் சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு தடை: வெள்ளை மாளிகை அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா வளைகுடா பெயர் மாற்றத்தை ஏற்க மறுப்பதால் சர்வதேச செய்தி நிறுவனத்திற்கு தடை விதித்து வெள்ளை மாளிகை அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘மெக்சிகோ வளைகுடாவை, அமெரிக்க வளைகுடா’ என்று மறுபெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்த மறு பெயர் மாற்ற நடைமுறையானது அமெரிக்க அரசு நிறுவனங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. இருப்பினும், புதிய பெயர் மாற்றத்தை மற்ற நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. மேலும் சர்வதேச செய்தி ஏஜென்சி நிறுவனமான ‘அசோசியேட்டட் பிரஸ்’ என்ற நிறுவனமும், தனது செய்திகளில் இன்னும் ‘மெக்சிகோ வளைகுடா’ என்றே குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டு வருகிறது. அதனால் உலகின் பிற செய்தி நிறுவனங்களும் இதே போன்று ‘மெக்சிகோ வளைகுடா’ பெயரிட்டே செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் உடனான செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ‘அசோசியேட்டட் பிரஸ்’ நிறுவனத்தின் நிருபர்களை அனுமதிக்கவில்லை. மேலும் அவர்கள் அதிபர் பங்கேற்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும் தடை விதிக்கப்பட்டது. அதேநேரம் ‘அசோசியேட்டட் பிரஸ்’ நிறுவனத்தில் பணிபுரியும் புகைப்படக் கலைஞர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வெள்ளை மாளிகையின் துணைத் தலைமை அதிகாரி டெய்லர் புடோவிச் வெளியிட்ட பதிவில், ‘அசோசியேட்டட் பிரஸ் நிறுவனம் அமெரிக்க வளைகுடாவின் சட்டப்பூர்வமான பெயர் மாற்றத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. அந்த நிறுவனத்தின் செயலானது பிளவுபடுத்தும் நோக்கில் உள்ளது.

தவறான தகவல்களை மற்ற செய்தி நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது. அமெரிக்க வளைகுடாவின் சட்டப்பூர்வமான புவியியல் பெயர் மாற்றத்தை அசோசியேட்டட் பிரஸ் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. எனவே ஓவல் அலுவலகம் மற்றும் ஏர் ஃபோர்ஸ் ஒன் போன்ற இடங்களுக்கு ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தியாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்கம், அசோசியேட்டட் பிரஸ்ஸுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

9,500 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்;

அமெரிக்க அரசின் உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், விவசாயம், சுகாதாரம் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதிபர் டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளரான அரசுத் துறை தலைவர் (அமைச்சருக்கு இணையான பதவி) எலான் மஸ்க் ஆகியோருக்கு எதிராக 75,000 ஊழியர்கள் தானாக முன்வந்து தங்கள் வேலைகளை விட்டு வெளியேறினர். மொத்த அமெரிக்க அரசுப் பணியாளர்களின் எண்ணிக்கை 23 லட்சம் என்ற நிலையில், அவர்களில் 3% பேர் தங்கள் வேலையை விட்டுவிட்டனர். முன்னாதாக அரசு ஊழியர்களை அதிகளவு பணியில் அமர்த்துவதால், அமெரிக்க அரசின் பணம் வீணடிக்கப்படுவதாக டிரம்ப் கூறினார். அதேசமயம், கடன் சுமையும் அதிகரித்து வருவதாகவும் கூறினர்.

அமெரிக்காவிற்கு 36 டிரில்லியன் டாலர் கடன் சுமை உள்ளதாகவும், கடந்த ஆண்டு நிதிப் பற்றாக்குறை 1.8 டிரில்லியன் டாலராக இருந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நிர்வாக சீர்திருத்த நடவடிக்கையாக தற்போது ஒரே நாளில் 9,500 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த அரசு ஊழியர்கள் அமெரிக்க அரசு நிலங்களைப் பாதுகாப்பது முதல் ஓய்வு பெற்ற வீரர்களைப் பராமரிப்பது வரை பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.