சென்னை: சிகாகோவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அமெரிக்காவின் டிரில்லியன்ட் நிறுவனத்துடன் ரூ.2000 கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் அதன் உற்பத்தி அலகு, வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையத்தை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் உலகப்புகழ்பெற்ற நைக்கி மற்றும் ஆப்டம் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் நிறுவனங்களை தொடங்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று அமெரிக்காவின் டிரில்லியன்ட் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் தமிழ்நாட்டில் அதன் உற்பத்தி அலகு, வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையத்தை நிறுவுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்த நிகழ்வில், ட்ரில்லியன்ட் நிறுவனத்தின் தலைமை வணிக அலுவலர் மைக்கேல் ஜே மார்டிமர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். கடந்த மாதம் 27-ம் தேதி அமெரிக்காவிற்கு சென்ற முதல்வர் மு.க. ஸ்டாலின், புகழ்பெற்ற தொழில் நிறுவனங்களையும், அதன் முதலீட்டாளர்களையும் சந்தித்து ஒப்பந்தங்களை நிறைவேற்றி வருகிறார்.
சான்பிரான்சிஸ்கோவில் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், ஓமியம் நிறுவனத்துடன் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன், 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் ஈட்டன் நிறுவனத்தின் உற்பத்தி வசதியை விரிவாக்குவதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாட்டு பொறியியல் மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும், அஷ்யூரன்ட் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் மொத்தம் 10 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (4ம் தேதி) சிகாகோவில், ட்ரில்லியண்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும், நைக்கி மற்றும் ஆப்டம் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
அதன் விவரம் பின்வருமாறு: ட்ரில்லியன்ட் நெட்வர்க்ஸ் நிறுவனம்: ட்ரில்லியன்ட் நிறுவனம் மேம்பட்ட அளவீட்டு உள்கட்டமைப்பு, ஸ்மார்ட் கிரிட், ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் ஆகியவற்றிற்கான தீர்வுகளை வழங்கும் முன்னணி சர்வதேச நிறுவனமாகும். இந்நிறுவனம் ஆற்றல் திறன், நம்பகத்தன்மை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் ஒருங்கிணைப்பு, மேம்பட்ட அளவீட்டு உள்கட்டமைப்பு போன்றவற்றிற்கு தீர்வுகளை வழங்குகிறது. இந்நிறுவனத்தின் கார்ப்பரேட் தலைமையகம் அமெரிக்க நாட்டின், வட கரோலினாவின் கேரியில் அமைந்துள்ளது. இந்த ட்ரில்லியன்ட் நிறுவனத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், 2000 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் உற்பத்தி அலகு, வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்த நிகழ்வில், ட்ரில்லியன்ட் நிறுவனத்தின் தலைமை வணிக அலுவலர் மைக்கேல் ஜே மார்டிமர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
நைக்கி நிறுவனம்: நைக்கி நிறுவனம் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய விளையாட்டு காலணிகள் மற்றும் ஆடைகள் தயாரிப்பு நிறுவனமாகும். நைக்கி நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும். கால்பந்து, கூடைப்பந்து, தடகளம், டென்னிஸ், அமெரிக்க கால்பந்து, கோல்ப், ஐஸ் ஹாக்கி போன்ற விளையாட்டிற்கான காலணிகள், ஜெர்சிகள், ஷார்ட்ஸ், கிளீட்ஸ், பேஸ்லேயர்ஸ் போன்றவை இதன் தயாரிப்பு பொருட்களில் அடங்கும். இந்த நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின், ஓரிகானின் பெவர்டன்னில் உள்ளது.
தமிழ்நாட்டில் நைக்கி நிறுவனம் அதன் விநியோகச் சங்கிலி விற்பனை நிலையங்களை அமைத்துள்ளது. மேலும், நைக்கி நிறுவனத்தின் இரண்டு பெரிய ஒப்பந்த உற்பத்தியாளர்களான ஃபெங் டே மற்றும் பவுச்சென் மூலம் தமிழ்நாட்டில் நைக்கி நிறுவனம் தனது காலணி உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு 60 லட்சம் ஜோடி காலணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் 28,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். நைக்கி நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு முதல்வர், நைக்கி நிறுவனத்தின் தலைமை வழங்கல் அலுவலர் வெங்கடேஷ் அழகிரிசாமி, துணைத் தலைவர்கள் கிறிஸ்டன் ஹேன்சன், ஜார்ஜ் காசிமிரோ மற்றும் உயர் அலுவலர்களுடன் தமிழ்நாட்டில் தோல் அல்லாத காலணிகளின் உற்பத்தியை மேலும் விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள், ஆடைகள் உற்பத்திக்கான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவது பற்றியும், சென்னையில் தயாரிப்பு உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு மையத்தை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும், தமிழ்நாடு அரசின் முதன்மையான திறன் மேம்பாட்டு திட்டமான “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், திறன் கூட்டாண்மையுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
ஆப்டம் நிறுவனம்: ஆப்டம் நிறுவனம் யுனைடெட் ஹெல்த்கேர் குழுமத்தின் துணை நிறுவனம். இது அமெரிக்காவில் உள்ள ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் Optum Rx, Optum Health, Optum Insight ஆகிய மூன்று வணிகங்களை மேற்கொண்டு வருகிறது. தரவு மற்றும் பகுப்பாய்வு, மருந்தக பராமரிப்பு சேவைகள், மக்கள் தொகை சுகாதாரம், சுகாதார விநியோகம் மற்றும் நடவடிக்கைகள் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்க நாட்டின் மினசோட்டா, ஈடன் பிராரியில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆப்டம் நிறுவனம் சென்னையில் 5,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் Revenue Cycle Management செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. ஆப்டம் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் ஆப்டம் நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், தமிழ்நாட்டின் செழித்து வரும் சுகாதார பாதுகாப்புத் துறைக்கு ஏற்ற வகையில், தொழில்துறைக்குத் தயாரான திறமைக் குழுவை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசித்தார். மேலும், இந்த சந்திப்பின்போது, திறன் மேம்பாடு மற்றும் திறன்சூழலை எவ்வாறு இணைந்து செயல்படுத்துவது என்பது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்த ரோஜர் கானர், உயர் செயல்திறன் கொண்ட நவீன சுகாதார அமைப்பை உருவாக்குவதற்கான தங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, தொடர்ந்து உலகளாவிய திறமைகளில் முதலீடு செய்து வருவதாகவும், வாடிக்கையாளர்களின் சேவை மற்றும் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்ய தங்கள் சேவை திறன்கள் மற்றும் செயல்திறனை மேம்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தார்.
* சிகாகோவில் அற்புதமான முன்னேற்றங்கள் முதல்வர் டிவிட்
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ட்ரில்லியன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் அதன் உற்பத்தி அலகு, வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையத்தை நிறுவிட ரூ.2000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டேன். இந்த மதிப்புமிக்க கூட்டாண்மைக்கு ட்ரில்லியன்ட்டுக்கு நன்றி. நைக்கி உடன் அதன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது மற்றும் சென்னையில் ஒரு தயாரிப்பு, உருவாக்கம் மற்றும் வடிவமைப்பு மையம் நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொண்டேன். ஏற்கனவே தமிழ்நாட்டில் ஆப்டம் நிறுவனத்தில் 5,000 பேர் வேலை செய்து வரும் நிலையில், அந்நிறுவனம் சுகாதாரத் துறைக்கான திறமையாளர்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. திருச்சி மற்றும் மதுரையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்தும் பரிசீலிக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.