சென்னை :உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் நம் தமிழ் பறையிசையை கேட்டபோது மெய்சிலிர்த்தது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “சியாட்டில் உள்ள தமிழ் அமைப்புகளின் ஏற்பாட்டில் மாணவர்கள் பறை இசைத்து மிகச்சிறப்பானதொரு வரவேற்பை கொடுத்தார்கள். “தமிழ் வரவேற்பு” வழங்கிய மாணவச் செல்வங்களுக்கும், தமிழ்ச் சொந்தங்களுக்கும் அன்பும்! நன்றியும்!மாணவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பள்ளிக்கல்வித் திட்டங்கள் குறித்தும், அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிகள் குறித்தும் கேட்டறிந்து அவர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள்.
தமிழ்நாடு மீதும், தமிழின் மீதும் பற்றுள்ள மாணவர்கள் ஞாயிறுதோறும் சிறப்பு தமிழ் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். தன்னார்வலர்கள் பலர் இணைந்து வாரம்தோறும் மாணவர்களுக்கு தமிழ் கற்பிக்கிறார்கள். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் இப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது தமிழ் வாழும்! தமிழ் வளரும்! என்பதற்கான சாட்சியாக அமைந்துள்ளது.இம்முயற்சிக்கு உறுதுணையாக விளங்கும் சியாட்டில் தமிழ் அமைப்புகளுக்கும், தன்னார்வலர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.