வாஷிங்டன்: உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த ஒப்புக் கொள்ளாத காரணத்தால் ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தண்டிக்க அந்நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க வேண்டுமென அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் மசோதா கொண்டு வந்துள்ளார். தற்போது ரஷ்யாவிடமிருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த மசோதா மூலம் இந்திய வர்த்தகத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இதற்கிடையே, 4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஜெய்சங்கர், ‘‘இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரகமும், அதிகாரிகளும் செனட்டர் கிரஹாமுடன் தொடர்பில் உள்ளனர். எரிசக்தி பாதுகாப்பில் எங்கள் கவலைகள் மற்றும் நலன்கள் அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடக்கும் எந்தவொரு முன்னேற்றமும் இந்தியாவின் நலனை பாதிக்கும் எனில் உரிய சமயத்தில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ஜெய்சங்கர் கூறுகையில், ‘‘தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா நடவடிக்கை எடுக்கும் என்பதை ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு மிகத் தெளிவாக தெரிவித்துள்ளோம். பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் ’’ என்றார்.