Wednesday, April 24, 2024
Home » அமெரிக்காவில் மணக்கும் நாகர்கோவில் கிராம்பு!

அமெரிக்காவில் மணக்கும் நாகர்கோவில் கிராம்பு!

by Porselvi

உலகளவில் நமது மேற்குத்தொடர்ச்சி மலைக்கென்று ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இயல்பாகவே பல்லுயிர்ப் பெருக்கம் அதிகளவில் நடைபெறும் மலைப்பகுதி என்பதால் இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கபுரியாக விளங்குகிறது இந்த மேற்குத்தொடர்ச்சி மலை. அதேபோல பல மருத்துவக்குணம் மிகுந்த நறுமணப் பயிர்கள் விளையும் மலையாகவும் விளங்குகிறது இந்த மலைத்தொடர். கிராம்பு, ஜாதிக்காய், ஏலக்காய், நல்ல மிளகு உள்ளிட்ட பயிர்கள் இங்கு செழித்து வளர்கின்றன. இதில் மிளகு, ஏலக்காய் உள்ளிட்டவை பல இடங்களில் பரவலாக பயிர் செய்யப்படுகின்றன.

கிராம்பு மட்டும் கொஞ்சம் அரிதான பயிராக இருக்கிறது. நமது தமிழகத்தில் நாகர்கோவில், தென்காசி உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே அதிக பரப்பில் கிராம்பு சாகுபடி நடக்கிறது. அதிலும் கிராம்பை சாகுபடி செய்து லாபம் ஈட்டும் விவசாயிகளும் குறைவாகத்தான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் நாகர்கோவில் டெரிக் பகுதியைச் சேர்ந்த சலாம். இவர் தனது மகன்கள் பைசல், அன்வர் சலாம் ஆகியோருடன் சேர்ந்து தங்களது 72 ஏக்கரில் கிராம்பை சாகுபடி செய்து வருகிறார்கள். மேற்குத்தொடர்ச்சி மலையில் பசுஞ்சோலையாக பரந்து விரிந்திருக்கும் சலாமின் கிராம்புக்காட்டுக்கு சென்றிருந்தோம். தாங்கள் கிராம்பு சாகுபடிக்கு வந்ததில் இருந்து, அதில் கிடைக்கும் வருமானம் வரை ஒவ்வொன்றாக விளக்கினார் சலாம்.

“பல தலைமுறைகளாக விவசாயத்தில் ஈடுபடுகிறோம். இப்போது நான், எனது மகன் என எல்லோருமே விவசாயம் பார்க்கிறோம். எங்களுக்குச் சொந்தமாக 72 ஏக்கர் நிலம் இருக்கிறது. ஆரம்பத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கிராம்பு சாகுபடி செய்தோம். இதில் நல்ல லாபம் கிடைத்ததால், கடந்த 2001ம் ஆண்டில் இருந்து கிராம்பைப் பிரதான பயிராக சாகுபடி செய்கிறோம். ஏற்கனவே நாங்கள் சாகுபடி செய்து எடுத்து வைத்திருந்த கிராம்பு விதைகளை, பிளாஸ்டிக் பைகளில் வளர்த்து நடவு செய்கிறோம். பிளாஸ்டிக் பைகளில் கிராம்பு விதைகளை ஊன்றிய இரண்டு வாரத்தில் வளர்ந்து வரத் தொடங்கும். வளர்ந்து வரும் கிராம்புச் செடிகளை ஒரு வருடம் வரையில் 9X6 அங்குல பைகளில் வைத்து வளர்ப்போம். இவை ஒரு வருடத்தில் 1 அடி வளரும். பின்னர், செடிகளை 12X9 அங்குல பைகளில் மாற்றி வளர்க்கத் தொடங்குவோம்.

இரண்டாவது வருடத்தில் செடிகள் அனைத்தும் 2 அடி வளரும். இந்த தருணத்தில் அதிக வேர்கள் வரத்தொடங்கும். அதனால் 18X12 அங்குல பைகளில் மாற்றி 3 வருடம் வரை வளர்ப்போம். மூன்று வருடத்தில் செடிகள் மூன்று அடி உயரம் வளர்ந்து இருக்கும். இந்த தருணத்தில் செடிகளை நிலத்தில் 3X3 அடி குழி தோண்டி நடவு செய்வோம். இரண்டு மரங்களுக்கு இடையில் 30 அடி இடைவெளி விட்டு மரங்களை நடவு செய்வோம். ஒரு ஏக்கர் நிலத்தில் 60 கிராம்பு மரங்களை சாகுபடி செய்திருக்கிறோம். 72 ஏக்கரிலும் 2500 கிராம்பு மரங்கள் உள்ளன. ஒரு ஏக்கருக்கு 60 என்றால், 72 ஏக்கருக்கு 4320 கிராம்பு மரங்கள் இருக்க வேண்டும். எங்களது நிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாறைகள் நிறைந்திருக்கின்றன. இதனால் 72 ஏக்கரில் 2500 கிராம்பு மரங்கள் மட்டுமே வைக்க முடிந்தது.

நாகர்கோவிலில் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவுவதால் வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதும். இதற்காக ஆழ்துளைக் கிணறும், கிணறும் வைத்திருக்கிறோம். இவற்றில் இருந்து பெரிய தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீரை ஏற்றி அங்கிருந்து கிராம்பு மரங்களுக்குப் பாய்ச்சுவோம். ஆண்டுக்கு இருமுறை மாட்டுச்சாணம், ஆட்டுப் புழுக்கை மற்றும் எலும்புப் பொடியை உரமாக வைத்து வருகிறோம். இதுபோக வெளியில் இருந்தும் உரம் வாங்குகிறோம். இதற்காகவே கிராம்பு தோட்டத்தில் 15 பசு மாடுகள், 40 ஆடுகளை வளர்த்து வருகிறோம். இதன் கழிவுகளே உரமாக விடுகின்றன. ஆடு, மாடுகளை கிராம்புக் காட்டில் மேய்ச்சலில் விடுவதால் அவை தேவையற்ற புற்களை மேய்ந்து விடுகின்றன. இதனால் களை எடுக்கும் வேலை எளிதாகிறது. ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் கிராம்பு மரம் பூக்கத் தொடங்கும். டிசம்பர் மாதத்தில் கிராம்பு அறுவடைக்குத் தயாராகிவிடும். மரங்களில் இருந்து பறித்த கிராம்புகளை மூன்று நாட்கள் வெயிலில் காய வைத்து விற்பனை செய்கிறோம்.

எங்களது கிராம்புக் காட்டில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள 25 நிரந்தர தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கிறோம். இதுபோக கிராம்பு சீசன் (டிசம்பர்) சமயங்களில் தினமும் கூடுதலாக 100 தொழிலாளர்கள் திருப்பத்தூர், திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதிகளில் இருந்து வேலை செய்ய வருகிறார்கள். தொழிலாளர்களுக்கு ஒரு கிலோ கிராம்பு அறுவடை ெசய்ய கூலியாக ரூ.90 வழங்குகிறோம். சில தொழிலாளர்கள் தினமும் 25 கிலோ வரை அறுவடை செய்வார்கள். சராசரியாக 7வது ஆண்டில் இருந்து நமக்கு மகசூல் கிடைக்கத் தொடங்கிவிடும். 10வது ஆண்டில் இருந்து ஒரு மரத்தில் சராசரியாக 35 கிலோ முதல் 40 கிலோ வரை கிராம்பு மகசூலாக கிடைக்கும்.
கிராம்புகள் கிட்டத்தட்ட மாங்காய் போலத்தான். ஒரு வருடம் நல்ல மகசூல் கிடைக்கும். அடுத்த வருடம் வெகுவாக குறையும். நாங்கள் சாகுபடி செய்துள்ள கிராம்பு மரங்கள் மூலம் 2022ம் ஆண்டில் 14 டன் மகசூல் (காய வைத்த கிராம்பு) கிடைத்தது. இந்த ஆண்டு அறுவடையில் பச்சை கிராம்பு 17 டன் கிடைத்திருக்கிறது.

இதனை காயவைக்கும்போது 6 டன் சிவப்பு நிற கிராம்பு கிடைக்கும். தற்போது அறுவடை செய்யப்படும் பச்சை கிராம்புகளை ரூ.285க்கும், சிவப்பு நிற காய்ந்த கிராம்பு கிலோ ரூ.925க்கும் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். சராசரியாக 1 டன் காய்ந்த கிராம்பிற்கு 9 லட்சத்து 25 ஆயிரம் வருமானமாக கிடைக்கும். நாங்கள் 8.5 டன் பச்சை கிராம்பு, 3 டன் காய்ந்த கிராம்பு என்ற கணக்கில் பிரித்து சந்தையில் விற்பனை செய்கிறோம். இதில் பச்சை கிராம்பு மூலம் ரூ.24.3 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. காய்ந்த கிராம்பு மூலம் ரூ.27.5 லட்சம் வருமானமாக கிடைக்கிறது. இதன்மூலம் எங்களுக்கு ரூ.51.8 லட்சம் வருமானமாக கிடைக்கிறது.

இதில் தொழிலாளர்களுக்கான சம்பளம், உரம் செலவு, ஏற்றுமதி கூலி, வண்டி வாடகை ரூ.15.3 லட்சம் போக ரூ.36.5 லட்சம் லாபமாக கிடைக்கிறது. நாங்கள் உற்பத்தி செய்யும் கிராம்புகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம். கிராம்பிற்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருப்பதால் கிராம்பினை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும்போது கிராம்பில் உள்ள நுனிப்பகுதி உடையாமல் இருக்க வேண்டும். மரத்தில் இருந்து கிராம்பைப் பறித்து வெயிலில் உலரவைத்து எடுக்கும்போதே கிராம்பு முன்புள்ள நுனிப்பகுதி உடைந்துவிடாமல் பாதுகாப்பது அவசியம். நம்பிக்கையுடன் கிராம்பு வளர்ப்பில் ஈடுபட்டால் நல்ல வருமானம் பெறலாம் என்பதற்கு நாங்களே சிறந்த உதாரணம்” என்கிறார் சலாம்.
– தொடர்புக்கு:
சலாம்: 99445 94449.

புவிசார் குறியீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 750 ஹெக்டேர் பரப்பளவில் கிராம்பு பயிரிடப்பட்டு இருக்கிறது. இது தமிழகத்தில் கிராம்பு பயிரிடப்படும் மொத்த பரப்பில் 73 சதவீதமாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலவும் மிதமான வெப்பநிலை காரணமாக, கிராம்பில் அடர்த்தியான வாசனை எண்ணெய் கிடைக்கிறது. இங்குள்ள கிராம்பு மரத்தின் மொட்டுகள், உதிர்ந்த இலைகள் மற்றும் தண்டுகளும் வாசனை எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் கிராம்பின் மொத்த உற்பத்தி 1,100 மெட்ரிக் டன். இதில், 1,000 மெட்ரிக் டன் தமிழகத்தில் உற்பத்தியாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 750 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடியாகும் கிராம்பில், யூஜினால் அசிடேட் என்ற வேதிப்பொருள் அதிகளவில் இருப்பதால், வாசனை எண்ணெய் அதிகம் கிடைக்கிறது. குமரி மாவட்ட கிராம்பு தரத்தில் முதலிடத்தில் உள்ளதால், மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மாறாமலை தோட்ட விவசாயிகள் சங்கம், கரும்பாறை மலைத்தோட்ட விவசாயிகள் சங்கத்தினரால் “கன்னியாகுமரி கிராம்பு”க்கு புவிசார் குறியீடு பெறப்பட்டிருக்கிறது.

You may also like

Leave a Comment

five + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi