வாஷிங்டன் : கூகுள் நிறுவனம் ஆண்டுதோறும் 82,000 கோடி ரூபாய் செலவழித்து தேடுபொறி சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது. ட்ரம்ப் ஆட்சி காலத்தில் வாஷிங்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூகுள் நிறுவனம் தேடுபொறி சந்தையில் தனது போட்டியாளர்களை புறந்தள்ள சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு பிறகு கூகுள் போன்ற ஒரு மிகப்பெரிய நிறுவனத்தின் மீது நம்பிக்கை துரோக சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை தொடங்கியுள்ளது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கடந்த 2010ம் ஆண்டு தனிப்பெரும் நிறுவனமாக உருவெடுத்த கூகுள், தற்போது தேடுபொறி சந்தையை 90% தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறினர்.
கூகுள் தேடுபொறியை மட்டும் முன்னிலைப்படுத்துவதற்காக ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் உட்பட பல தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.82 ஆயிரம் கோடியை கூகுள் வழங்குவதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு இணையத்தின் எதிர்காலம் சார்ந்தது மட்டுமின்றி இனியாவது ஆரோக்கியமான போட்டியை கூகுள் எதிர்கொள்ளுமா என்பதை தீர்மானிப்பதும் கூட என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. அரசின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த கூகுள் தரப்பு வழக்கறிஞர், கூகுள் தேடுபொறி அதன் தரம் காரணமாகவே பிரபலமாக உள்ளதாக தெரிவித்தார்.
திருப்தி இல்லாத நுகர்வோர்கள் சில கிளிக்குகளில் வேறு தேடுபொறிக்கு செல்லலாம் என்றும் அவர் கூறினார். இந்த வழக்கின் முதற்கட்ட வாதங்கள் 10 வாரங்கள் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு தரப்பு கூகுளிடம் அபராதம் கோருவதற்கு பதிலாக அதன் சட்ட விரோத வணிக நடவடிக்கைகளுக்கு தடைகோரியே வாதிட்டு வரும் நிலையில், வழக்கு ஓராண்டு வரை நீடிக்க வாய்ப்புள்ளது.இதே போன்ற 3 வழக்குகளில் ஐரோப்பிய யூனியன் கூகுள் நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.