வாஷிங்டன்: பாக். ராணுவ தளபதி அசிம் முனீர் 5 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் அமெரிக்க ராணுவ அணிவகுப்புக்கு அவர் அழைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இருப்பினும் இதை அமெரிக்கா மறுத்தது. இந்த சூழலில் வாஷிங்டனின் அசிம் முனீர் தங்கியிருக்கும் ஓட்டலை முற்றுகையிட்டு பாக். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியினர் திரளானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில்,’ அசிம் முனீர், நீ ஒரு கோழை, வெகுஜன மக்களை கொல்லும் நீ, ஒரு கொலைகாரன். இது உனக்கு அவமானம், நீ ஒரு சர்வாதிகாரி, நீ பாகிஸ்தான் மக்களை கொல்லும் கொலையாளி’ போன்ற கோஷங்களை எழுப்பினர். மேலும் அசிம் முனீர் ஓட்டலை விட்டு வெளியேறும் போது, அவரை முற்றுகையிட்டு, அவர்கள் வாக்குவாதம் செய்தனர். மேலும் அவரை மீண்டும் ஓட்டலுக்குள் நுழையவிடாமல் தடுத்தனர்.
இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அசிம் முனீர் தங்கியிருந்த ஒட்டலுக்கு எதிரே ஒரு மொபைல் மின்னணு விளம்பரப் பலகை வைக்கப்பட்டு இருந்தது. அதில்,’அசிம் முனீர், படுகொலை செய்பவர், துப்பாக்கிகள் பேசும்போது ஜனநாயகம் இறந்துவிடுகிறது’ போன்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.