வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல் ட்ரம்ப்பின் நிர்வாக உத்தரவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசு செயல் திறன்துறை தலைவர் பதவியிலிருந்து எலன் மஸ்க்கை நீக்க வலியுறுத்தியும் அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. அமெரிக்க அதிபர் டோனல் ட்ரம்ப்பின் கொள்கைகள், நிர்வாக உத்தரவுகள் மற்றும் நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா முழுவதும் போராட்டங்கள் வலுவடைந்துள்ளன. டெஸ்சாஸ் மாகாணம், ஆஸ்டினில் நடைபெற்ற போராட்டத்தில் அமெரிக்க மக்கள் திரளாக பங்கேற்றனர். ட்ரம்ப் எதிர்ப்பு வாசகங்கள், படங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி 100 கணக்கானோர் முழக்கங்களை எழுப்பினர்.
அமெரிக்க மக்கள் வாக்களித்து தேர்வு செய்யாத எலன் மஸ்க்கை செயல்திறன் துறை தலைவராக அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ளதற்கும் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தலைநகர் வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகை அருகே ட்ரம்ப்புக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான அமெரிக்க மக்கள் கலந்து கொண்டு எலன் மஸ்க்கை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். செலவு குறைப்பு நடவடிக்கை என்ற பெயரில் செயல் திறன் துறை தலைவர் எலன் மஸ்க்கின் திட்டங்களால் சொந்த நாட்டிலேயே ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வேலை இழக்க நேரிட்டுள்ளதாக அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.