வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் 46வது அதிபராக இருந்தவர் 82 வயதான ஜோ பைடன். இவர் கடந்த 2021-2025 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தவர். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் அதிபர் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு ஏற்படுவது போன்ற சில அறிகுறிகள் தென்பட்டுள்ளது. ஜோ பைடன் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் இருக்கிறார். தற்போது அவருக்கு புரோஸ்டேட் (Prostate) புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது
இந்த புற்றுநோய் கிளீசன் ஸ்கோர் 9 (கிரேடு குழு 5) பாதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது நோயின் தீவிரத்தை குறிக்கிறது. பைடனும், அவரது குடும்பத்தினரும் சிகிச்சை குறித்து டாக்டர்களுடன் ஆலோசித்து வருகின்றனர். தீவிரமான வகைப் புற்றுநோயாக இருந்தாலும் அதை குணப்படுத்த முடியும் என பைடனின் குடும்பத்தினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே ஜோ பைடனின் சமீபத்திய மருத்துவ நோயறிதலைப் பற்றி அறிந்து நான் வருத்தம் அடைந்தேன். அவர் விரைவாகவும், வெற்றிகரமாகவும் குணமடைய வாழ்த்துகிறேன் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.