புதுடெல்லி: இலங்கை தமிழர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண 13ஏ சட்டத் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார். இருதரப்பு உறவுகள் குறித்து இந்தியா இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்க கூட்டத்தில் ஒன்றிய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது, “இலங்கையின் பல இன, மொழி, மத அடையாளங்களை பாதுகாக்க இந்தியா ஆதரவளிக்கும். இலங்கையின் ஒன்றுபட்ட மற்றும் வளமான கட்டமைப்புக்கு சமத்துவம், சமூக நீதி மற்றும் சுயமரியாதை உள்ளிட்ட தமிழ் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13ஏ சட்டத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்துவது. மாகாண சபை தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவது ஆகியவை இந்த நோக்கங்களை எளிதாக்கும்” என்று தெரிவித்தார்.