ஆம்பூர் : ஆம்பூர் அருகே நாயக்கனேரி ஊராட்சி தலைவி கடத்தப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது நாயக்கனேரி ஊராட்சி. இந்த ஊராட்சியில் தலைவர் பதவி கடந்த தேர்தலின்போது எஸ்சி பிரிவை சேர்ந்த பெண் பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அப்பகுதியினர் தேர்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ முன்வரவில்லை.
இந்நிலையில், அதே ஊராட்சியில் உள்ள காமனூர் தட்டை பகுதியை சேர்ந்த பாண்டியன் மனைவி இந்துமதி(27) ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். யாரும் போட்டியிட முன்வராத நிலையில் இந்துமதி ஊராட்சி மன்ற தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யபட்டார். ஆனால், இந்துமதி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட சிலரை அப்பகுதியினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக தெரிகிறது. இதனால் இந்துமதி மற்றும் அவரை சார்ந்த குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேறி சோலூர் மற்றும் இதர பகுதிகளில் வசிக்க துவங்கினர்.
இந்நிலையில், சோலூரில் வசித்து வந்த இந்துமதி கடந்த 9ம் தேதி அருகில் உள்ள கடையில் பால் வாங்கி வருவதாக கூறி சென்றாராம். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் பாண்டியன் அவரை பல இடங்களில் தேடி உள்ளார். எங்கும் தனது மனைவி கிடைக்காததால் நேற்று மதியம் ஆம்பூர் தாலுகா போலீசில் தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு புகார் செய்தார். அதில் அதே ஊரை சேர்ந்த 4 பேர் தனது மனைவியை கடத்தி இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஊராட்சி தலைவி இந்துமதியை தேடி வருகின்றனர்.