*4 பேர் படுகாயம்
ஆம்பூர் : ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேற்று 2 ஆட்டோக்கள், பைக் மீது கார் மோதியதில் தனியார் ஊழியர் இறந்தார். பெண்கள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சாணாங்குப்பத்தில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சாலையை கடப்பதற்காக ஆட்டோ, இருசக்கர வாகனங்கள் நின்று கொண்டிருந்தன.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஒரு கார் கட்டுபாட்டை இழந்து ஆட்டோ மீது மோதியது. மேலும், எதிரில் இருந்த இரு சக்கரவாகனம், மற்றொரு ஆட்டோ மீதும் கார் மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த தனியார் நிறுவன தொழிலாளியான வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு சவுக் தெருவை சேர்ந்த வெங்கடேசன்(65) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஆட்டோ ஓட்டுனர்களான மின்னூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த செல்வகுமார்(31), சோலூரை சேர்ந்த வினோத்குமார்(31), ஆட்டோவில் வந்த அரசு நிதியுதவி பள்ளி ஆசிரியர்களான மின்னூரை சேர்ந்த சித்ரா(57), தனலட்சுமி(49) ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல் வெங்கடேசனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி தப்பிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.