சென்னை: அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வன்கொடுமை வழக்கில் விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) முன்னாள் துணைத்தலைவர் மணியன் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தியாகராயநகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான பால வெங்கட சுப்பிரமணியன் என்ற ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் குறித்து இழிவாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட தலைவர் இரா.செல்வம் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் மணியன் மீது, வன்கொடுமை தடைச்சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாம்பலம் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தற்போது மணியன் ஜாமீன் பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞர் எம்.சுதாகர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். சுமார் 200 பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகையில் அரசு தரப்பில் 15 சாட்சிகள், 34 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குற்றபத்திரிகை வழக்கு எண்ணிட்ட பிறகு விரைவில் விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.