சென்னை: சுற்றுச்சூழல் சார்ந்த கல்வியையும், சட்டக் கோட்பாடுகளையும் இயற்கை சூழலில் கற்பிக்கும் வகையில் சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில் மியாவாக்கி காடுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமாரின் கனவு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் 3 ஆண்டுகளுக்கு முன் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் சட்டம், சட்ட ஒழுங்கு துறை மற்றும் ஈகோ கிளப் மாணவர்கள் இணைந்து விதைகளை தூவினர். தற்போது அந்த விதைகள் மரமாக வளர்ந்து, பசுமை பரப்பாக உருவாகியுள்ளது.
இந்நிலையில் நேற்று பசுமை பரப்புக்கு நடுவே மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் நடைமுறையை துணைவேந்தர் சந்தோஷ்குமார் தொடங்கி வைத்தார். அவர், சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் அதன் நடைமுறை அமலாக்கங்கள் பற்றிய விரிவான விளக்கங்களை வழங்கினார். நிகழ்வில், சுற்றுச்சூழல் சட்டத் துறையின் துறைத் தலைவர் பேராசிரியர் ஹரிதா தேவி, உதவிப் பேராசிரியர்கள் ஸ்டான்லி, நவீன், கதிரவன் மற்றும் ஈகோ கிளப் மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.