அம்பத்தூர்: அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகே பேட்மிண்டன் பயிற்சியாளர் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்பத்தூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ராஜ் (63). இவரது மகன் தினேஷ் பாபு (35). இவர் பேட்மிண்டன் பயிற்சியாளராகவும், கட்டிட கான்ட்ராக்டராகவும் தொழில் செய்து வந்தார். இவர், அம்பத்தூர் தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள பேட்மிண்டன் மையத்திற்கு, தினசரி காலை, மாலையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வருவது வழக்கம்.
அதன்படி, நேற்று மாலை 4 மணியளவில் வீட்டிலிருந்து பேட்மிண்டன் பயிற்சி மையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த 4 பேர், அவரை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் தினேஷ் பாபுவை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் சம்பவ இடத்திலேயே தினேஷ் பாபு பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்த அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தினேஷ் பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆவடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.