புதுடெல்லி: மக்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்ற பாஜ எம்பி நிஷிகாந்த் துபே, சமீபத்தில் நடந்த பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டதாக கூறியிருந்தார். இந்நிலையில் பாஜ எம்பியின் கூற்றை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரிய ஷ்ரினேட் எக்ஸ் தள பதிவில், ‘‘பாஜ எம்பி துபே பொய் கூறுகிறார்.
காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி அம்பானியின் மகன் திருமணத்தில் கலந்துகொண்டதாக கூறுகிறார். இது முற்றிலும் தவறானதாகும். பிரியங்கா காந்தி திருமணத்துக்கு செல்லவில்லை. உங்கள் உள்துறை அமைச்சருக்கும் இது தெரியும். அனைவரையும் கண்காணிக்கும் கெட்ட பழக்கம் அவருக்கு உள்ளது. போலி பட்டம் பெற்ற பாஜ எம்பிக்கு பொய் கூறும் மோசமான நோய் உள்ளது. மக்களவை உறுப்பினரல்லாத பிரியங்கா பற்றி அவையில் பேசலாமா?’’ என்று குறிப்பிட்டுள்ளார்.