சென்னை: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வீட்டு முன் கொடிக்கம்பம் அகற்றிய விவகாரத்தில் கைதான அமர்பிரசாத் ரெட்டி, ‘இனி தவறு செய்ய மாட்டோம்’ என நீதிமன்றத்தில் உறுதிமொழி பிரமாணப்பத்திரம் அளித்துள்ளார்.
சென்னை அடுத்த பனையூரில், பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வீட்டின் முன் பாஜ கொடி கம்பத்தை அகற்றுவது தொடர்பாக நடந்த பிரச்னையில் பா.ஜ., விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத், நிர்வாகிகள் சுரேந்திர குமார், செந்தில்குமார், வினோத் குமார், பாலமுருகன், கன்னியப்பன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் கடந்த 11ம் தேதி உயர் நீதிமன்ற நிபந்தனைபடி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இதையடுத்து, நேற்று ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும், ‘‘இனி வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டோம்’’ என உறுதி மொழி பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்ட பின் வெளியே வந்தனர். அமர் பிரசாத் ரெட்டி நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பா.ஜ., பயிற்சியும், சிறைச்சாலையும் ஒன்றுபோல் தான் உள்ளது. அதுபோல் தான் எங்களுக்கும் கட்சி சார்பில் பயிற்சி அளிப்பார்கள். சிறைச் சாலையில் மனித உரிமை மீறல் நடக்கிறது. இது குறித்து ஒன்றிய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வேன்’’ என்றார்.