காஷ்மீர் : பஹ்லகாம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு – காஷ்மீரில் சுற்றுலா தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், அமர்நாத் யாத்திரிகைக்கான ஹெலிகாப்டர் சேவையை ரத்து செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிறகு, அம்மாநிலத்தில் சுற்றுலா தளங்கள் அனைத்தும் மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சுற்றுலா மையங்கள் அனைத்திலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அடுத்த மாதம் தொடங்க உள்ள அமர்நாத் யாத்திரையின் போது, ஹெலிகாப்டர் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது. இந்த யாத்திரை தெற்கு காஷ்மீர் பகுதியான பஹல்காம் வழியாகவும் வடக்கு காஷ்மீர் பகுதியான பால்டல் வழியாகவும் நடைபெறும். இந்த இரண்டு வழித்தடங்களிலும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டு வந்த, ஹெலிகாப்டர் சேவைக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் அமர்நாத் யாத்திரை பகுதியில் ஜூலை 1ம் முதல் ஆகஸ்ட் 10 வரை விமானங்கள் பறப்பதற்கு முழு தடை விதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பயணிகளுக்கான ஹெலிகாப்டர் பயன்பாட்டிற்கு இந்த பகுதியில் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.