காஷ்மீர்: வரலாறு காணாத பாதுகாப்புடன் அமர்நாத் யாத்திரை இன்று தொடங்கியது. தீவிரவாத அச்சுறுத்ததால் பஹல்காமில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குக் காரணமான மூன்று பாகிஸ்தானிய தீவிரவாதிகளைப் பிடிக்க மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டும், அவர்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தத் தாக்குதல் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, வருடாந்திர அமர்நாத் யாத்திரையிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு யாத்திரைக்குப் பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கையிலும் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலால், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய பதற்றமான சூழலுக்கு மத்தியிலும், வருடாந்திர அமர்நாத் யாத்திரை இன்று ஜம்முவில் இருந்து கோலாகலமாகத் தொடங்கியது. ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநரும், அமர்நாத் ஆலய வாரியத்தின் தலைவருமான மனோஜ் சின்ஹா, யாத்திரை ெசல்லும் பக்தர்களின் முதல் குழுவை கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
இதுவரை இல்லாத வகையில் சுமார் 600 கூடுதல் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், தீவிரவாத அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரு யாத்திரைப் பாதைகளிலும் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக, ஜம்முவில் இருந்து அடிவார முகாம்களுக்கு இலவசப் பேருந்து சேவை மற்றும் பிற வசதிகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது.