ஜம்மு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கியது. தெற்கு காஷ்மீரில் இமயமலையில் சமார் 3880மீ உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் உருவாக்கும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கமாகும். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கியது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு ஜம்முவில் இருந்து முதல் குழுவை ஆளுநர் மனோஜ் சின்கா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் 5200 பேர் கொண்ட இரண்டாவது குழுவினர் அனந்நாக் மாவட்டத்தின் பஹல்காம் மற்றும் கந்தர்பல் மாவட்டத்தில் உள்ள பால்டல் பாதை வழியா அமர்நாத் யாத்திரை நேற்று தொடங்கினார். பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து புறப்பட்ட 2வது குழுவில் 4,74 ஆண்கள், 786 பெண்கள் மற்றும் 19 சிறுவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுவரை மொத்தம் 11,138 பேர் அமர்நாத் யாத்திரைக்கு சென்றுள்ளனர்.பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக இந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 9ம் தேதி முடிவடையும்.