உடுமலை: அமராவதி அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசனத்துக்காக பிரதான கால்வாயில் இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு ஆற்று வழியாகவும், புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பிரதான கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறக்கப்படுகிறது. தவிர, நூற்றுக்கணக்கான கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த ஆண்டு மே கடைசி வாரம் பெய்ய துவங்கிய தென்மேற்கு பருவமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, படிப்படியாக அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. சில நாட்களுக்கு முன் அணை நிரம்பியதையடுத்து, உபரிநீர் ஆற்றிலும், கால்வாயிலும் திறந்துவிடப்பட்டது. அணையின் ர்மட்டம் 88 அடிக்கும் மேல் இருந்தது. தொடர்ந்து 1000 கனஅடிக்கு மேல் நீர்வரத்து உள்ளது. இதையடுத்து, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.
இதுகுறித்து நீர்வளத்துறை அரசு செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அமராவதி அணையில் இருந்து பிரதான கால்வாயில் புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்றும் பொருட்டு ஜூன் 20-ம் தேதி (இன்று) முதல் ஜூலை 5ம் தேதி வரை 15 நாட்களுக்கு விநாடிக்கு 440 கனஅடி வீதம் 570.24 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 25,250 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நீர்வளத்துறை அதிகாரிகள் இன்று (வெள்ளி) காலை 8 மணிக்கு அணையில் இருந்து பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டனர்.