திருமலை: ஆந்திர தலைநகர் அமராவதி அமைப்பதற்காக சிங்கப்பூர் நிறுவனத்துடன் மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்று நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விஜயவாடாவில் ஆந்திர மாநில நகர வளர்ச்சி துறை அமைச்சர் நாராயணா அமராவதி தலைநகர் வளர்ச்சி திட்டம் குறித்து நேற்று பேசியதாவது: ஆந்திர மாநில தலைநகர் அமைக்க முதல்வர் சந்திரபாபு மீது இருந்த நம்பிக்கையால் விவசாயிகள் நிலம் வழங்கினர். அந்த விவசாயிகள் கடந்த ஐந்தாண்டுகளாக சிரமத்தில் இருந்தனர். எனவே மேலும் ஐந்தாண்டுகளுக்கு அமராவதி விவசாயிகளுக்கு குத்தகை தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தலைநகரில் நிலம் ஒதுக்கப்பட்ட அமைப்புகளுக்கு அலுவலகம் அமைக்க மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு காலக்கெடுவை நீட்டித்துள்ளோம். கேப்பிட்டல் அமராவதி டெவலப்மென்ட் அத்தாரிட்டியில் 778 பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளது.
மேலும் 32 ஆலோசகர்களை பணியமர்த்த ஆணையம் முடிவு செய்துள்ளது. ஷீட் தலைநகருக்கான கட்டுமானம் தொடர்பாக கடந்த ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் மீண்டும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும். ஷீட் தலைநகர் அமைப்பது தொடர்பாக சிங்கப்பூர் அரசின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளோம். கிருஷ்ணா நதி ஓரத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க முடிவு செய்துள்ளோம். கிருஷ்ணா நதியை ஒட்டி நான்கு வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 8352.69 சதுர கிலோ மீட்டர் அமராவதி தலைநகர் பகுதி இருக்கும் விதமாக வடிவமைக்கப்பட உள்ளது. அமராவதியில் உள்ள சாலைகளை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணா நதி மத்தியில் 6 ஐகானிக் பாலங்கள் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.