தாராபுரம் : திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ளது அமராவதி ஆறு. இதில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட மழை நீர் வெள்ளத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட முதலைகள் தப்பி வந்து அமராவதி ஆற்றின் நீர்வழி பாதையில் பல்வேறு இடங்களில் தங்கிவிட்டன. கடந்த சில ஆண்டுகளாகவே இம்முதலைகளால் ஏற்பட்ட இனப்பெருக்கத்தில் மடத்துக்குளம் அருகே உள்ள குமரலிங்கம் அமராவதி ஆற்றில் இருந்து கரூர் மாவட்டம் வரை பல்வேறு இடங்களில் முதலைகள் இனப்பெருக்கம் பெருகி இவற்றில் ஐந்துக்கு மேற்பட்ட முதலைகளை தாராபுரம் அமராவதி ஆறு சீதக்காடு, சங்கரண்டாம் பாளையம், மணலூர் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்து பொதுமக்களை அச்சுறுத்தியது. இதை தொடர்ந்து முதலைகளை அமராவதி வனத்துறையினர் பிடித்து சென்றனர். ஆனால் அவ்வப்போது அமராவதி ஆற்றில் திடீர் திடீரென தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டி பொதுமக்களை முதலைகள் அச்சுறுத்தி வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை அமராவதி சீத்தக்காடு தடுப்பணை பகுதியில் சுமார் 70 கிலோ எடை கொண்ட 6 அடி நீளம் உள்ள் முதலை திடீரென தண்ணீருக்கு வெளியே தலையை நீட்டி வாயை பிளந்த நிலையில் அச்சுறுத்தியதை பார்த்த அப்பகுதியில் குளிப்பதற்காக சென்ற பொதுமக்களும் கோவிலுக்கு சென்ற பக்தர்களும் அலறியடித்து ஓடினர். இந்நிலையில், இந்த முதலைகளை வனத்துறையினர் முற்றிலுமாக பிடித்து சென்று அமராவதி முதலை பண்ணையில் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.