சிட்னி: வங்கதேசத்தில் நிலவும் கலவர சூழல் காரணமாக அங்கு மகளிர் டி20 உலக கோப்பையை நடத்துவது சரியான முடிவாக இருக்காது என்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அலிசா ஹீலி தெரிவித்துள்ளார். மகளிர் டி20 உலக கோப்பை அக்.3-20 வரை வங்கதேசத்தில் நடைபெற உள்ளது. அதில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உட்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. தற்போது அங்கு கலவரமான சூழல் நிலவுவதால் போட்டியை சுமூகமாக நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இத்தொடரை வேறு நாடுகளுக்கு மாற்றும் வாய்ப்புகள் குறித்தும் ஐசிசி ஆய்வு செய்து வருகிறது. இந்தியாவில் நடத்தும் வாய்ப்பு இல்லை என்று பிசிசிஐ செயலர் ஜெய் ஷா திட்டவட்டமாக தெரிவித்துவிட்ட நிலையில், அரபு அமீரகம் அல்லது ஜிம்பாப்வேக்கு மாற்றப்படும் வாய்ப்பு இருக்கிறது. நிலைமையை கண்காணித்து வருவதாக ஐசிசி மீண்டும் தெரிவித்துள்ளது. வங்கதேச கிரிக்கெட் வாரியம், ‘உலக கோப்பை போட்டியை நடத்துவதற்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்’ என அந்நாட்டு ராணுவத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்நிலையில், நடப்பு சாம்பியன் ஆஸி. அணி கேப்டன் அலிசா ஹீலி கூறுகையில், ‘வங்கதேசத்தில் நிலவும் சூழலை பார்க்கும்போது, அங்கு விளையாட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. எனினும், அங்கு போட்டியை நடத்துவதா வேண்டாமா என்பதை ஐசிசி-யின் முடிவுக்கு விட்டு விடுகிறேன். அதே நேரத்தில் உலக கோப்பை எங்கு நடந்தாலும், அது எங்கள் ஆட்டத்தை பாதிக்காது’ என்றார்.