Sunday, April 21, 2024
Home » அல்வா மாநகர கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் ஆப்சென்ட்டால தேசியக்கட்சி தலைவர்கள் அப்செட்டான கதையை சொல்கிறார்: wiki யானந்தா

அல்வா மாநகர கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் ஆப்சென்ட்டால தேசியக்கட்சி தலைவர்கள் அப்செட்டான கதையை சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘மாஜி முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் மின்விளக்குகளை அணைச்சுட்டு மகளிர்களுக்கு புடவைகள் சப்ளை செய்ததா பேசிக்கிறாங்களே’’ எனக்கேட்டபடியே வந்தார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி மாஜி முதல்வர் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மலைக்கோட்டை மாநகரில் நேற்று முன்தினம் இரவு நடந்திருக்கு.. இந்த கூட்டத்தில சிறப்பு அழைப்பாளரா பிரபல நடிகை வரவழைக்கப்பட்டு இருந்தாராம்.. பொதுக்கூட்டத்தில் மகளிர்கள் அதிகம் பேர் பங்கேற்றதால் அவங்களுக்கு புடவைகள் வழங்க நிர்வாகிங்க முடிவு செய்திருந்தாங்களாம்.. இதற்காக முதல்நாளே வீடுவீடாக சென்று அவர்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டதாம்.. டோக்கன் பெற்றுக்கொண்ட மகளிர்களும் பொதுக்கூட்டத்திற்கு வந்திருந்தார்களாம்.. நேரம் ஆக ஆக டென்சனுக்கு சென்ற மகளிர்கள், இந்த நடிகை அம்மா வேற எப்போது பேசி முடிப்பாங்க.. பொதுக்கூட்டம் எப்போது முடிய போதோ.. புடவைகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு எப்போ செல்வதுன்னு அவங்களுக்குள்ளே புலம்ப தொடங்கிட்டாங்களாம்.. கூட்டம் முடிந்த அடுத்த நொடியே கையில் டோக்குனுடன் மேடையை நோக்கி மகளிர்கள் முண்டியடித்து சென்றிருக்காங்க.. டோக்கன்களை பெற்றுக்கொண்ட நிர்வாகிகள், பரிசு பொருட்களான புடவைகள் வழங்கும்போது மகளிர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுருக்கு.. ஒரு கட்டத்தில் கூச்சல் குழப்பம் அதிகமானதால சுதாரித்த நிர்வாகிகள், மீடியாக்காரங்க யாரும் புகைப்படம் எடுத்துவிடக்கூடாதுன்னு உடனே மின்விளக்குகளை எல்லாம் அணைச்சுப்புட்டாங்களாம்… அப்புறம் மளமளவென மகளிர்களுக்கு பரிசு பொருட்களான புடவைகளை கொடுத்து முடிச்சாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கூட்டணி தலைவர்கள் வராததால தேசிய கட்சியின் தலைவர்கள் கடும் அப்செட்டாமே…’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தேசிய கட்சியின் கூட்டணியை இலைக்கட்சி கைகழுவி விட்ட நிலையில், தமிழகத்தில் மக்களவை தேர்தலில் தேசிய கட்சிக்கு சரியான கூட்டணி இன்னும் அமையவில்லை. இதனால சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவு எடுத்துருக்கு.. இதற்கிடையே பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வந்ததால அல்வா நகரத்தில் அவரது பொதுக்கூட்டத்திற்கு தேசிய கட்சியினர் ஏற்பாடு செய்திருக்காங்க… பொதுவா.. அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் என்றாலே கூட்டணி கட்சியினரும் இடம் பெறுவது வழக்கம்.. அதுவும் தேர்தல் நேரத்தில் என்பதால்.. பிரதமர் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் என்றால், சும்மாவா, கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொள்ளாமல் இருப்பாங்களா…. ஆனால் அல்வா மாநகரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி கலந்துகொண்டு பேசினாலும் கூட்டணி தலைவர்கள் ஆப்சென்ட். இலைக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தேனிக்காரர் தேசிய கட்சியுடன் தானாக சென்று ஒட்டிக்கொண்ட போதிலும், பல்லடத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்காதவர் தனக்கு செல்வாக்குள்ளதாக கூறும் அல்வா மாநகரில் மோடி பங்கேற்ற கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதேபோல, குக்கர் காரரும் தேசிய கட்சியின் கூட்டணியில்தான் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அவரும் மோடி கூட்டத்தில் ஆப்சென்ட். தேசிய கட்சியை அடிக்கடி பாராட்டி பேசி வரும் டாக்டரையும் கூட்டத்தில் காணவில்லை. இப்படி தென் மாவட்டங்களில் ஓரளவு வாக்கு பலமுள்ள இவர்கள் மூன்று பேரும் வராத நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்கள் என்ற பெயரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், தென் மண்டல பார்வர்டு பிளாக் கட்சி தலைவர்கள் மட்டுமே ஆஜரானாங்களாம்.. இதனால தேசிய கட்சியின் தலைவர்கள் கடும் அப்செட்டாயிட்டாங்களாம்… இந்த கூட்டணியை வைத்துக் கொண்டு தான் தேர்தலை சந்திக்கப் போகிறோமா என்ற கவலையில் இருக்கிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஒரு கட்சியில, மாவட்டத்துல இருந்து ஒட்டுமொத்த மெம்பர்ஸ்சும் தலைமைக்கு ராஜினாமா லெட்டர் அனுப்பியிருக்கிறாங்களாமே…’’ அதுபற்றி சொல்லுங்க என்றார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்துல நாம் என்று தொடங்குற கட்சியோட ஒருங்கு இணைப்பாளர் ஒருத்தரு கொஞ்ச நாளுக்கு முன்னாடி கட்சியில இருந்து விலகிட்டாரு. இவரு தாமரை கட்சியில ஐக்கியமாக வாய்ப்பு இருக்குதுன்னு பரவலாக பேசப்பட்டு வருது.. இதேபோல வெயிலூர் மாவட்டத்துல இருக்குற இதே கட்சியோட டிஸ்ட்ரிக் செக்ரட்டரி, தொகுதியோட இன்சார்ஜ் என்று பல்வேறு பொறுப்புகள்ல இருக்குற 150 மெம்பர்ஸ், அனைத்து நிலை பொறுப்புல இருந்தும் உறுப்பினர் நிலையில இருந்தும், நாங்க விலகிக்குறோம்னு தலைமை நிர்வாகத்துக்கு லெட்டர் போட்டிருக்காங்களாம்.. கடந்த லோக்கல்பாடி எலக்‌ஷன்ல கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட ஒரு நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கணும்னு தலைமைக்கு லெட்டர் அனுப்பியும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லையாம்.. இதனால திரும்பவும், புகாருக்குள்ளான நபரோட வழிகாட்டுதலின் கீழ் செயல்பட விருப்பம் இல்லைன்னு காரணம் சொல்லிட்டு அவங்க ஒட்டுமொத்தமா ராஜினாமா லெட்டர் அனுப்பியிருக்காங்களாம்.. நாடாளுமன்ற எலெக்‌ஷன் நடக்க இருக்குற நேரத்துல நாம் என்று தொடங்குற கட்சியிலயும், வெயிலூர் மாவட்டத்துலயும் இதுதான் பரபரப்பா பேசப்பட்டு வருது..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

11 − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi