இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான்(72) 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தார். பின்னர் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது. இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி வகித்தபோது பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டதாக அவர் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இதையடுத்து கைது செய்யப்பட்ட இம்ரான் கான் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கான் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளில், அல்-காதிர் அறக்கட்டளை ஊழல் வழக்கும் ஒன்று. அல்-கதிர் பல்கலைக் கழகம் தொடங்க அறக்கட்டளை அமைத்து நிலம் வாங்கிய முறைகேட்டில் அரசுக்கு ரூ.5,500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக இம்ரான் கான் மீது குற்றம்சாட்டப்பட்டது.
அல்-காதிர் ஊழல் வழக்கில் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீவி ஆகியோர் மீதான தண்டனையை நிறுத்தி வைக்க கோரி அவர்கள் சார்பில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நாளை மறுதினம் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இந்த வழக்கில் இம்ரான் கானுக்கும், புஷ்ரா பீவிக்கும் ஜாமீன் கிடைக்கும் என பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சி தலைவர் கோஹல் அலி கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.