Wednesday, September 11, 2024
Home » விலகியிருந்து பூரணமானவர்

விலகியிருந்து பூரணமானவர்

by Lavanya

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 77 (பகவத்கீதை உரை)

நிஷ்காம கர்மம் சுலபமானது, அதுவே கடைபிடிக்கத் தக்கது என்று கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார். இதுதான் அவ்வாறு மேற்கொள்பவனுக்கு சாந்தியையும், ஞானத்தையும் அருளவல்லது என்கிறார், அவர்.

ஞேய: ஸ நித்யசந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி
நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே (5:3)
‘‘நிஷ்காம கர்மத்தை மேற்கொள்பவன் வெறுப்பும், விருப்பும் இல்லாதவனாக, நித்ய சந்நியாசியாகத் திகழ்கிறான். அவன் எளிதில் பந்தத்திலிருந்து விடுபட்டவனாக ஆகிறான். காரணம், அவன் இரு நிலைகள் கொண்டவனாக இருப்பதில்லை, அதனால்தான்.’’

தன்னுடைய பணிகளிலிருந்து விலக விரும்புபவன், அவற்றைச் செய்யாமலிருப்பவன், அவற்றை சோம்பல் காரணமாக ஒத்திப் போடுபவன் எல்லாம் இரு நிலைப்பாடு உடையவனாக இருப்பான். அவ்வாறு செய்யும் பணிகளில் அவன் முழு ஈடுபாடு கொண்டிருக்க மாட்டான், அதோடு அவற்றால் என்ன பயன் என்றும் எதிர்பார்த்துக் காத்திருப்பான்.ஆனால், தன் தினசரி அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் ஒரு யோகி, விருப்பு வெறுப்பு அற்றவனாக இருக்கிறான். பிறரைப் போலவே அவன் தன் கடமைகளை, செயல்களை நிறைவேற்றுகிறான் என்றாலும், அவற்றின் பின்விளைவுகளால் அவன் பாதிக்கப்படுவதில்லை. ஏனென்றால் செயலாற்றுவது ஒன்றே அவன் வேலை.

தான் செய்யும் கர்மாவில் ஏதேனும் ஆதாயம் வருமானால் அதை அனுபவிக்க அவன் விரும்புவதில்லை. அதேபோல நஷ்டம் ஏற்படுமானால் அதற்காக துக்கப்படுவதுமில்லை. அவனுக்குத் தெரியும், ஆதாயத்தால் வரும் சுகமும் சரி, நஷ்டத்தால் வரும் வருத்தமும் சரி, இரண்டுமே நிரந்தரமில்லை என்று. இரண்டுமே தற்காலிகமானவைதான். இரண்டிற்குமே நீடித்த ஆயுள் கிடையாது. இரண்டையும் புரிந்துகொண்டால், மனம் சலனப்படாது, விசனப்படாது.

விவேகானந்தர் வாழ்க்கையில் ஒரு சம்பவம்:

தன்னை ஒரு சந்நியாசியாகப் பிரகடனப்படுத்திக் கொண்டு அல்லது பிறரால் அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டு சந்நியாச மனப்பாங்குடனேயே அவர் திகழ்ந்தார். அவர் தன் வீட்டைவிட்டு வெளியே எங்கேனும் செல்லும்போதும், திரும்ப வரும்போதும் சற்றுத் தொலைவில் உள்ள ஒரு சிறு தெரு வழியாகத்தான் போகவேண்டும், வரவேண்டும். இதுதான் தொலைவையும், நேரத்தையும் மிச்சம் பிடிக்கும் வழி. ஆனால் அவர் அந்தத் தெருவழியாகப் போகாமல் இரண்டு, மூன்று மைல் தூரம் தள்ளி, சுற்றுப் பாதை வழியாகத்தான் போய் வருவார்.

காரணம், அந்தச் சிறு தெருவில் விலைமாதர்கள் குடியிருந்ததுதான். தன் சந்நியாச தோரணைக்கும், வாழ்க்கைக்கும் அவ்வாறு அந்தத் தெருவில் தான் போய் வருவது முரண்பாடானது, ஒவ்வாதது என்று அவர் கருதியிருந்தார். ஒருவேளை, ‘விவேகானந்தர் அந்தத் தெரு வழியாகப் போகிறாரே, வருகிறாரே’ என்று பிறர் தன்னை, அதாவது ஒரு சந்நியாசியைத் தூற்றுவார்களோ என்றும் அவர் கருதியிருக்கலாம்.

ஆனால் ஒரு சந்நியாசிக்கு இப்படி ஒரு எண்ணம் வரலாமா? பிறர் என்ன சொல்வார்களோ என்று சிந்திப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? அந்தத் தெருவுக்குள் போகாமல், சுற்றி வளைத்துக்கொண்டு போவதால், அவ்வாறு சிந்திக்கக் கூடியவர்களைத் தான் திருப்திபடுத்துகிறோமா? அல்லது, அவர்கள் தூற்றுவதையும் மீறி அந்தத் தெருவழியாகப் போனால், அவர்கள் மனவருத்தமடைவார்களே என்று கவலைப்படுகிறோமா? இவ்வாறு பிறரைத் திருப்திபடுத்துவதும், அவர்களுக்காகக் கவலைப்படுவதும் ஒரு சந்நியாசிக்கு முறையா?  அல்லது அந்தத் தெருவழியாகப் போனால் தான் மனச்சலனம் அடைந்துவிடுவோமோ என்ற பயமா? இப்படி பயம் கொள்வது சந்நியாசிக்கு அழகா?

இந்தக் கேள்விகளுக்கு அவராலேயே பதில் சொல்ல முடியவில்லை. ஒருசமயம் ஜெய்ப்பூருக்கு அருகே ஒரு சமஸ்தானத்திற்கு அவர் விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அந்த சமஸ்தானத்தின் மகாராஜா, தன் விருந்தினராக வந்திருப்பவர் ஒரு சந்நியாசி என்பதை அறிந்திருந்தாலும், ராஜ உபசாரம் செய்ய வேண்டும் என்ற தன் பாரம்பரிய கோட்பாடு காரணமாக அனைத்துவகை ஏற்பாடுகளையும் செய்திருந்தார். தன் அரண்மனைக்கு வரும் விவேகானந்தருக்கு அறுசுவை உண்டி, ஆடம்பரமான இருக்கை, நறுமணம் கமழும் மலர்ச்சரங்கள் ஆகியவற்றோடு இன்பமாகப் பொழுதுபோக்கும் அம்சமாக ஓர் இளம்பெண்ணின் நடனத்துக்கும் ஏற்பாடு செய்திருந்தார். அந்தப் பெண் இந்த நிகழ்ச்சிக்காகவே பிரத்யேகமாக காசியிலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு தாசி.

ஏற்கெனவே தான் வசதி செய்து தந்திருந்த மாளிகையில் தங்காமல், விவேகானந்தர் தனியே ஒரு கூடாரம் அமைத்துக்கொண்டு அதில் தன் சீடர்களுடன் தங்கியிருந்ததை அறிந்த பிறகாவது மன்னர் அந்த நடன நிகழ்ச்சியை ரத்து செய்திருக்க வேண்டும். ஆனாலும், அப்போதும், தான் ஒரு மன்னர், உலகம் போற்றும் ஒரு துறவியை தன் அந்தஸ்துக்கு ஏற்பதான் உபசரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அவர் தீர்மானமாகக் கொண்டு விட்டதால், அவருக்கு அவ்வாறு ரத்து செய்யவோ அல்லது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்றோ தோன்றவேயில்லை.

அரண்மனைக்குப் போக வேண்டிய நேரம் நெருங்கியபோதுதான், அங்கே நடன நிகழ்ச்சி ஏற்பாடாகியிருந்தது விவேகானந்தருக்குத் தெரிய வந்தது. உடனே அவ்வாறு சென்று அந்த நடன நிகழ்ச்சியைக் காண்பது தன் சந்நியாசத்துக்கு இழுக்கு என்று கருதினார். ஆகவே அரண்மனைக்குப் போகாமல் கூடாரத்திலேயே தங்கி விட்டார். அவர் வராததற்கான காரணத்தைத் தெரிந்து கொண்ட மன்னர் சுதாரித்துக்கொள்வதற்குள் நடனம் ஆரம்பமாகி விட்டது.

தன் பாடல் மற்றும் நடனத்தைக் காணப்போகும் பிரதான விருந்தினர் விவேகானந்தர் என்பதைத் தெரிந்துகொண்ட அந்த தாசி, பெரு மகிழ்ச்சி கொண்டாள். பணம் கொடுப்பவர்களுக்கும், அதிகாரம் கொண்டவர்களுக்குமாக ஆடி, ஆடி மனதால் களைத்துவிட்ட தான் பெருத்த ஆறுதல் பெறும் வகையில் ஒரு சந்நியாசி முன் ஆடவிருப்பதில் அவளுக்கு உற்சாகம். அதாவது இப்படி ஆடுவதும், அந்த சந்நியாசியின் ஆசியைப் பெறுவதும், இதுகாறும் தான் செய்துவந்த ‘பாபச் செயலு’க்குப் பரிகாரம் தேடிக் கொள்வது போன்றது என்று அவள் உவகையுடன் கருதினாள்.
ஆனால் விவேகானந்தர் அந்த நிகழ்ச்சிக்கு வரப் போவதில்லை என்று கேள்விப்பட்டு மிகவும் துக்கமடைந்தாள்.

ஆனாலும், அவருக்கும் கேட்கும் வகையில் உரத்துப் பாட ஆரம்பித்தாள். ‘உலோகத்தால் ஆன மணி, பூஜையறையில் இருக்கிறது; அதே உலோகத்தால் ஆன கத்தி கசாப்பு கடையிலும் இருக்கிறது. ஆனால், எந்த உலோகத்தையும் தொட்டவுடன் தங்கமாக்கும் பாரஸ் என்ற கல்லுக்கோ மணி, கத்தி இரண்டுமே ஒன்றுதான். அது இரண்டையுமே தங்கமாக்கும். அது பூஜையறை, கசாப்பு கடை என்றா பேதம் பார்க்கிறது? நான் பூஜையறை மணியைத்தான் தங்கமாக்குவேன், கசாப்புக்கடை கத்தியைத் தங்கமாக்க மாட்டேன் என்று அந்த பாரஸக் கல் மறுக்குமானால், அது உண்மையான பாரஸக் கல்தானா? அது போலி இல்லையா?’ என்ற பொருள்படும்படி அவள் பாடியதைக் கேட்ட விவேகானந்தருக்கு பளிச்சென்று சந்நியாசத்தின் உண்மை புலப்பட்டது.

உடனே அரண்மனைக்கு வந்தார். அந்த தாசி, மன்னர் உட்பட எல்லோருமே அவர் வருகையால் பெரிதும் மகிழ்ந்தனர். தன் வீட்டைவிட்டுச் செல்லும்போதும், திரும்பி வரும்போதும் தான் தாசி தெருவைத் தவிர்த்துவிட்டு வெகுதூரம் சுற்றிக்கொண்டு போய் வந்ததையும், இப்போது இந்த நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்று முடிவெடுத்ததையும் அவர் நினைத்துப் பார்த்தார். துறவு, சந்நியாசம் என்று மேற்கொண்டு விட்ட பிறகு, ஆன்மாவின் பரிசுத்தம்தானே முக்கியம்? மனசை ஏன் முன்னிறுத்திக் கொள்ள வேண்டும்? ‘துறவிலிருந்து நழுவி விடுவாய், சந்நியாசக் கோட்பாடுகளிலிருந்து விழுந்துவிடுவாய்’ என்றெல்லாம் மனம் எச்சரித்து இப்படி இரு சம்பவங்களிலும் தன்னை விலக்கி வைத்தது முறையா? அப்படியென்றால் தான் மேற்கொண்ட துறவறத்தில் தனக்கே சந்தேகம் இருந்திருக்கிறது.

கூட்டங்களுக்குப் போவதும், பிறருக்கு அறிவுரை பகர்வதும், தனக்கு எதிலும் ஆர்வம், ஆசை இல்லை என்று காண்பித்துக் கொள்வதும் போலிதானா? மனசுக்குள் ஏதோ ஒரு மூலையில் கொஞ்சம் பயம் ஒளிந்து கொண்டிருந்திருக்கிறது. அதுவே தன் கொள்கையை முழுமையாக்கிக் கொள்ள முடியாதபடி செய்திருக்கிறது…

இப்போது விவேகானந்தரின் மனதில் விகல்பம் இல்லை. அந்தப் பெண்ணின் பாட்டோ, அவளுடைய நடனமோ, மன்னரின் உபசரிப்போ எதுவுமே அவர் கேட்டு, பார்த்து, அனுபவித்தாலும் அவற்றிலிருந்து அவர் விலகியே இருந்தார். இப்போதுதான் அவர் பூரணமானார். தன் கர்மாக்களில் மனதை ஈடுபடுத்தாத நேர்த்தியில் அவர் நித்திய சந்நியாசியானார்.

எந்த உள் உந்துதலும் இல்லாமல் கர்மாவை இயற்றுவது எங்ஙனம்? ஒரு விஷயத்தை எழுத வேண்டும் என்றால் பேனாவை எடுக்க வேண்டும், பேப்பரை எடுக்க வேண்டும். அப்புறம் எழுத வேண்டும். எழுத வேண்டும் என்ற உந்துதல் இல்லாவிட்டால், பேனாவையும், பேப்பரையும் தேடி நாம் போக வேண்டிய அவசியம் என்ன? ஆகவே, நிர்ச்சலனமாய் கர்மாவை இயற்ற வேண்டும் என்ற கிருஷ்ணனின் அறிவுரை இங்கே ஏற்கக் கூடியதாக இல்லையே?

எழுத வேண்டும் என்ற உந்துதல் ஓர் இயற்கையான காரணம் – உடலின் காலைக்கடன் முதலான இயற்கையான நடைமுறைகள் போல. அதற்காக பேனாவையும், பேப்பரையும் தேடுவதும் இயற்கையானவையே. ஆனால், அவ்வாறு எழுதுவதால் விளையக் கூடியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருத்தல் வேண்டும் என்பதுதான் கிருஷ்ணனின் அறிவுரை. இதுதான் நிஷ்காம கர்மம்.

எந்த உள் உந்துதலும் இல்லாமல் கர்மாவை இயற்ற இயலாது என்பதற்கான அர்த்தம், அவ்வாறு கர்மா இயற்றியதனால் ஏற்படும் பலன்களை எதிர்பார்ப்பது என்பதுதான்.‘எந்த வேலையையுமே விளையாட்டாகச் செய்வான்’ என்று சொல்வார்கள். அதாவது விளையாட்டாகச் செய்வது என்பது எந்த மன இறுக்கமுமின்றி, எந்த எதிர்பார்ப்புமின்றி, சந்தோஷத்துடன் செய்வது. ஆனால் விளையாட்டுப் போட்டி வேறு! இங்கே ஆக்ரோஷம் இருக்கும், வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற வெறி இருக்கும்.அந்த வெற்றிக்காக, அந்த சமயத்திற்காகவாவது, சக போட்டியாளர்களைப் பகையாக நினைக்கத் தோன்றும். வெற்றி கண்டால் துள்ளி குதிக்கச் சொல்லும், தோல்வி கண்டால் துவண்டு சோர்ந்துவிடச் செய்யும்.

ஆகவே ‘விளையாட்டாக’ச் செய்வது என்பது அதுவாகவே நிகழும் ஒரு நிகழ்வில் பங்கேற்பது! அது இயல்பானது, நிர்ச்சலனமானது குழந்தைகள் விளையாடுவது போல! குழந்தைகள் பொம்மைகளைப் பரிமாறிக் கொள்கின்றன. இந்தச் செயலில் அன்பு பரிமாறிக்கொள்ளப் படுகிறது. குழந்தைகள் விளையாட்டில் சிரிப்பும், சந்தோஷமும் பரிமளிக்கின்றன. கள்ளமற்ற உள்ளப் பரிமாற்றம், விருப்பு வெறுப்பற்ற, தெளிவான நீலவான மனமாக! இந்த வகையில்தான் கர்மாக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.

எந்தச் செயலைச் செய்வதுமே நம் சக்தியின் வெளிப்பாடாக இருப்பதுதான் யதார்த்தம். ஆனால் அதில் நிர்ப்பந்தம் இல்லை. முன்பெல்லாம் வீட்டுத் தோட்டத்திலோ, ஏதேனும் பூங்காவிலோ, வயல் வரப்பிலோ, ஆற்றங்கரை அல்லது கடற் கரையிலோ நடை பழகினோம். சுகமான சுவாசம், இதமான குளிர்ச்சி, பசுமையான காட்சிகள், நிதானமான நடை, மென் சிரிப்பாகப் பரிமாறிக்கொள்ளப்படும் நட்பு என்று அந்த நடைப் பழகலின் விளைவுகள் மென்மையாகச் சூழ்ந்துகொண்டன. இதில் நிர்ப்பந்தம் இல்லை.

ஆனால், இப்போது உடல்நலத்தை முன்னிறுத்தி, அதனால் நடை பழகுதல் என்பது நடைப் ‘பயிற்சி‘யாகி விட்டது! எடை குறைய வேண்டும், சர்க்கரை குறைய வேண்டும் என்பதுபோன்ற எதிர்பார்ப்புகளுடன்! அதாவது நிர்ப்பந்தத்துக்குட்பட்ட நடை பழகுதல்!ஆகவே, கிருஷ்ணன் அறிவுறுத்துவது மனச்சலனமற்ற நடை பழகுதலைத்தானே தவிர எதிர்பார்ப்புகளுடன் கூடிய நடைப் பயிற்சியை அல்ல.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

You may also like

Leave a Comment

4 + eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi