ரியாத்: போர்ச்சுகலை சேர்ந்த, உலகப் புகழ் பெற்ற நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (40), ஆண்டுக்கு ரூ. 2000 கோடி சம்பளத்துடன், சவுதி அரேபியாவை சேர்ந்த அல் நஸர் கால்பந்தாட்ட அணியில் மீண்டும் தக்க வைக்கப்பட்டுள்ளார். போர்ச்சுகலை சேர்ந்த ரொனால்டோ, தன் வாழ்நாளில் 34 முறை கால்பந்தாட்ட கோப்பைகளை வென்றெடுத்தவர். கால்பந்தாட்டத்தில், உலகில் அதிகபட்சமாக 140 கோல்கள் அடித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். சவுதி புரோ லீக், அல் நஸர் கால்பந்து அணிகளுக்காக ஆடிவரும் அவர் அவற்றின் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.
ரொனால்டோ உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், அவரை அடுத்த 2 ஆண்டுகளுக்கு மீண்டும் அல் நஸர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தப்படி, ரொனால்டோ மீது, அல் நஸர் அணி, பணத்தை குற்றால அருவியாக பொழிந்து திகைக்க வைத்துள்ளது. புதிய ஒப்பந்தப்படி, ரொனால்டோவுக்கு ஆண்டு சம்பளம் ரூ. 2000 கோடி. தவிர, அல் நஸர் அணியின் பங்குகளில் 15 சதவீதம் அளிக்கப்பட உள்ளது. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு போனஸாக மட்டும், ரூ.292 கோடி வழங்கப்படும்.
இது, 2வது ஆண்டில், ரூ.445 கோடியாக அதிகரிக்கும். போட்டிகளில் கோல்டன் பூட் கவுரவத்தை அவர் பெற்றால், அதற்காக ரூ.47 கோடி கிடைக்கும். சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தால், ரூ. 100 கோடி வழங்கப்படும். போட்டிகளில் ரொனால்டோ அடிக்கும் ஒவ்வொரு கோலுக்கும் ரூ. 1 கோடி பரிசு கிடைக்கும். கோலடிக்க உதவினால் கூட, அதற்கும் ரூ. 50 லட்சம் வழங்கப்படும். இவை தவிர, விளம்பரங்கள் மூலம், அவருக்கு மேலும், ரூ.600 கோடி கிடைக்கும் என கூறப்படுகிறது. ரொனால்டோ, தனி ஜெட் விமானங்களில் பயணிக்க, ரூ. 50 கோடியை ஒதுக்கி உள்ளது அல் நஸர்.